துர்கா பூஜை, முகமது யூனுஸ் எக்ஸ் தளம்
உலகம்

துர்கா பூஜை கொண்டாட்டத்தில் கட்டுப்பாடுகள்! வங்கதேசத்தின் இந்து எதிர்ப்பு நிலைப்பாடா? பின்னணி என்ன?

இடைக்கால ஆட்சி நடக்கும் வங்கதேசத்தில், இந்துக்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள், அந்த நாடு, நடுநிலைத் தன்மையிலிருந்து விலகுகிறதோ என்ற கேள்விகளை விதைத்துள்ளது.

PT WEB

இடைக்கால ஆட்சி நடக்கும் வங்கதேசத்தில், இந்துக்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள், அந்த நாடு, நடுநிலைத் தன்மையிலிருந்து விலகுகிறதோ என்ற கேள்விகளை விதைத்துள்ளது. துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவுகள், இந்தக் கேள்விகளுக்கு காரணியாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் வீதிகளில் வெடித்த மாணவர்கள் போராட்டம், பற்றி எரிந்த வன்முறை, மூச்சுமுட்ட வைத்த அரசியல் நெருக்கடி என, அடுத்தடுத்த அழுத்தங்களால், பதவியை துறந்துவிட்டு, வங்கதேசத்தில் இருந்தே வெளியேறினார், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ராணுவத்தின் உதவியுடன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளது.

ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, இந்திய அரசின் நட்பை, நல்லுறவை விரும்பியது. இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே முன்வைத்தது. ஆனால் தற்போதைய இடைக்கால அரசு, இந்தியாவுடனான உறவை பேணிப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. அந்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீதும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களின் மீதும் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. உதாரணத்துக்கு, ஹில்சா மீன் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

இதையும் படிக்க: AFG Vs NZ| 26 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட்.. என்ன காரணம்?

வங்கதேசத்தில் உள்ள ஆறுகளிலும், வங்கதேசத்தை ஒட்டிய வங்காளவிரிகுடாக் கடலில் மட்டுமே, ஹில்சா வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. வங்கதேசத்திலும் மேற்கு வங்க மாநிலத்திலும் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, இந்த வகை மீன்களை சமைத்து உண்பது மரபு. இதை தடுக்கும் விதமாக, ஹில்சா வகை மீன்களின் ஏற்றுமதிக்கே தடை விதித்துள்ளது வங்கதேச அரசு.

அரிதாகக் கிடைக்கும் ஹில்சா மீன்கள் என்பது தங்கள் நாட்டு மக்களுக்கான பரிசாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தடை விதித்ததாக விளக்கம் தருகிறது வங்கதேசம். ஆனால், ஷேக் ஹசீனா ஆட்சியின்போது, துர்கா பூஜை எனப்படும் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, ஹில்சா மீன்கள் இந்திய பகுதிகளில் தாராளமாக கிடைத்தது. மேற்கு வங்க மாநில முதலமைச்சருக்கு, வங்கதேச அரசின் பரிசாகவே ஹில்சா மீன்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், இந்தியா மற்றும் இந்துக்கள் மீதான மற்றொரு உணர்வுப்பூர்வமான தாக்குதலையும் நடத்தியுள்ளது வங்கதேச அரசு. துர்கா பூஜையின்போது, அதாவது பத்து நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின்போது, பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கட்டுப்பாடுகள் என்ற பெயரில் திணித்திருக்கிறது வங்கதேச அரசாங்கம். அந்நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையாக இருந்தாலும், நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வண்ணமயமான நிகழ்ச்சிகள் அரங்கேறும்.

இதையும் படிக்க: வரலாற்றில் முதல்முறை.. விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர்!

இந்த ஆண்டு, தலைநகர் டாக்கா உள்பட, 32,666 இடங்களில் சிலைகளை நிறுவி, நவராத்திரி வழிபாட்டு மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்படியான நிலையில், நவராத்திரி கொண்டாட்டங்களின்போது, தொழுகை நேரங்களில், பூஜை நிகழ்ச்சிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வங்கதேச உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தொழுகை தொடங்கும் 5 நிமிடங்களுக்கு முன்னரே, நவராத்திரி கொண்டாட்ட மண்டபங்களில் ஒலி எழுப்பும் சாதனங்கள் அனைத்தையும் நிறுத்திவைக்க வேண்டும் என்கிறது அந்த உத்தரவு.

வழக்கமாக, தொழுகைக்காக அழைப்பு விடுத்து 'பாங்கு' ஒலிக்கப்பட்டாலே, தொழுகைக்கு எந்த வகையிலும் இடையூறு நேரிடாமல் இருக்க முனைப்பு காட்டுவது பிற மதத்தினரின் இயல்பு. வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்களின் இயல்பும் இதுதான். ஆனால், இந்துக்களின் நவராத்திரி கொண்டாட்ட உரிமையில் மூக்கை நுழைத்து, மத பாகுபாட்டு நோக்கில், கட்டுப்பாடுகளை திணிப்பது ஏன் என்பதே, மில்லியன் டாலர் கேள்விகளாக எழுகின்றன.

இதையும் படிக்க: “எங்கள் வங்கிக் கணக்குகளை சுவிஸ் முடக்கியதா? இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு” - அதானி குழுமம் விளக்கம்!