உலகம்

இஸ்லாமுக்கு எதிரான வெறுப்பை தடை செய்யுங்கள்: ஷூக்கர்பெர்க்குக்கு இம்ரான்கான் கடிதம்

இஸ்லாமுக்கு எதிரான வெறுப்பை தடை செய்யுங்கள்: ஷூக்கர்பெர்க்குக்கு இம்ரான்கான் கடிதம்

webteam

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சமூக வலைதளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உள்ளடக்கத்தைத் தடை செய்யுமாறு ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி ஷூக்கர்பெர்க்குக்கு கடிதம் எழுதியுள்ளார். பொதுவாக இஸ்லாம் மதத்துக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக உள்ள வெறுப்புணர்வு இஸ்லாமோபோபியா எனப்படுகிறது.

"வளர்ந்துவரும் இஸ்லாமோபோபியா, உலகம் முழுவதும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் தீவிரவாதத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கின்றன" என்று கான் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சமூக வலைதளங்களில் இஸ்லாம் மதத்துக்கு எதிரான வெறுப்பான கருத்துக்களைத் தடையிட வலியுறுத்தி ஷூக்கர்பெர்க்குக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லிம்களிடையே தீவிரமயமாக்கல் அதிகரிக்கும் என்றும் இம்ரான்கான் எச்சரித்துள்ளார். "ஹோலோகாஸ்ட்டை (யூத இன அழிப்பு) விமர்சனம் செய்யும் அல்லது கேள்வி கேட்கும் எந்தவொரு பகிர்வையும் தடைசெய்ய நீங்கள் எடுத்த நடவடிக்கையைப் பாராட்டுகிறேன்" என்று சுட்டிக்காட்டியுள்ள இம்ரான்கான், "அதேபோல இஸ்லாமுக்கு எதிரான வெறுப்புகளையும் ஃபேஸ்புக்கில் தடை செய்யவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரனின் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.