பால்டிமோர் பாலம் சீரமைப்பு ட்விட்டர்
உலகம்

அமெரிக்கா | பால்டிமோர் பாலம் விபத்து - கப்பல் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது

கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து தற்போது கப்பல்கள் மீண்டும் செல்லும்படி அந்த போக்குவரத்து முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

PT WEB

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் கடந்த மார்ச் 26 அன்று பால்டிமோர் (baltimore) பகுதியிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் (Francis Scott Key Bridge) இடிந்து விழுந்தது. டாலி (Dali) என்ற சரக்கு கப்பல் மின்சாரத்தை இழந்து பாலத்தில் மோதியதால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டிருந்தது.

பாலம் சரிந்து சீட்டுக்கட்டுபோல விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை அச்சமயத்தில் ஏற்படுத்தின. இதன்பிறகு அப்பகுதியில் கப்பல் வழி போக்குவரத்து தடைபட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்குப் பின்னர் பால்டிமோர் துறைமுகத்துக்கான பிரதான கப்பல் தட போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து தற்போது கப்பல்கள் மீண்டும் செல்லும்படி அந்த போக்குவரத்து முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, விபத்தின்போது ஆற்றில் விழுந்த 50,000 டன் இரும்பு மற்றும் கான்கிரீட் குப்பைகள் தற்போது முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன.

முன்னதாக நேற்று அமெரிக்க ராணுவப் பொறியாளர்கள், “இந்த கப்பல் தடம் போக்குவரத்துக்குப் பாதுகாப்பானது” எனச் சான்றளித்துள்ளனர். இந்த வழித்தடம், ஃபோர்ட் மெக்ஹென்றி ஃபெடரல் வழித்தடம் (Fort McHenry Federal Channel) எனப்படுகிறது. இதன் அசல் பரிமாணத்தில், கடலில் 700 அடி அகலம் மற்றும் 50 அடி ஆழம் வரை சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் இருவழி போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.

Fort McHenry Federal Channel சீரமைப்பு பணி

இந்த சீரமைப்பு பணியை, 500 நிபுணர்கள் உட்பட சுமார் 1500 பேர் சேர்ந்து செய்துள்ளனர். தற்போதைக்கு 50 அடி வரை இருந்த இரும்பு மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், “50 அடிக்கு கீழுள்ள பகுதியில் தேங்கியுள்ள குப்பையாலும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். வருங்காலத்திலும் இந்த போக்குவரத்து சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலம் இடிந்த விபத்தில் கடந்த ஏப்ரல் மாதம், FBI குற்றவியல் விசாரணையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. டாலி கப்பல், இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்பேவும் பல முறை மின்சாரத்தை இழந்துள்ளது எனத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கடந்த மாதம் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த காட்சி

இந்நிலையில் இடிந்து விழுந்த மேரிலேண்ட் பால்டிமோர் பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு, இன்னும் 4 வருடங்கள் ஆகும் என்றும், அதற்கு 1.7 பில்லியின் முதல் 1.9 பில்லியின் டாலர் வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது. ஆக அந்த கட்டுமான பணி 2028-ல்தான் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஜீவ நந்தினி