மரபணு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிலை காரணமாக பிறக்கும் குழந்தைகளின் விரல்கள், தலைகள், உடல்கள் இரட்டையாக இருப்பது குறித்த பல செய்திகளை தினசரி கடந்து வந்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் விட மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கும் செய்தியாக வந்திருப்பதுதான் இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை பற்றியது.
டிஃபாலியா (Diphallia) என்ற அரிய வகை மருத்துவ நிலை காரணமாக அந்த குழந்தைக்கு வழக்கமான வடிவில் இரண்டு ஆணுறுப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு பாகிஸ்தானில் நடந்திருக்கிறது. இந்த அரிதான நிகழ்வு 60 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்குதான் நடக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இரட்டை ஆணுறுப்புடன் பிறந்த இக்குழந்தை குறித்து மருத்துவர்கள் பேசியதில், “குழந்தையின் இரட்டை ஆணுறுப்பில் ஒன்றின் நீளம் மற்றொன்றை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் இரண்டு ஆணுறுப்பின் வழியாகவும் குழந்தையால் சிறுநீர் கழிக்க முடியும்” என தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், இரண்டு ஆணுறுப்புடன் பிறந்த குழந்தைக்கு ஆசனவாய் இல்லாத காரணத்தால், குழந்தைக்கு colonoscopy என்ற பெருங்குகுடல் அகநோக்கல் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் குழந்தையால் மலம் கழிக்க முடியும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்வு குறித்து விசாரித்ததில், குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த டிஃபாலியா அறிகுறி இருந்திருக்கவில்லை என உறுதியாகியிருக்கிறது.
குழந்தைக்கு இரண்டு சிறுநீர்க்குழாய் இருந்தாலும், ஒரே ஒரு சிறுநீர்ப்பையே இருப்பதாகவும், இரண்டு உறுப்புகள் வழியேவும் குழந்தையால் சிறுநீர் கழிக்க முடியும் என்றும் கூறியுள்ள மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகிலேயே இதுவரை இந்த டிஃபாலியா வகை 100 பேருக்கு மட்டுமே நடந்திருப்பதாகவும், முதல் முதலில் 1609ம் ஆண்டு இதே மாதிரியான குழந்தை பிறந்ததாகவும் அறுவை சிகிச்சைகளுக்கான சர்வதேச இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த டிஃபாலியா வகை மாறுபாடு குறித்த ஆபத்துக்கான காரணிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறதாம்.