ஆஸ்திரியா நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் 31 வயதான செபாஸ்டியன் குர்ஸ் வெற்றி பெற்று, உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆஸ்திரியா நாட்டின் பொதுத்தேர்தலில் செபாஸ்டியன் குர்ஸின் தலைமையிலான கன்சர்வேடிவ் மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 31 சதவிகித வாக்குகள் கிடைத்தபோதிலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் அக்கட்சியே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. அத்துடன் முழுப்பெரும்பான்மைக்காக அக்கட்சி, சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய குர்ஸ், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காலம் கனிந்துவிட்டது என தெரிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த குர்ஸ், கடந்த மே மாதம் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு வந்தார். அதற்கு முன் தமது 27வது வயதில், நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் குர்ஸ் பதவி வகித்துள்ளார். ‘உண்டெர்உஸ்சி’ என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் குர்ஸ், கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸின் மேக்ரோன் ஆகியோருக்கு இணையான இளம் தலைவராக ஒப்பிடப்படுகிறார்.