தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கச் சென்ற நீச்சல் வீரர்களில் ஒருவரானத ஆஸ்திரேலிய டாக்டரின் தந்தை நேற்று மரணமடைந்தார்.
தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம். இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகளை சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்தில் குவிந்தனர். இதில் திறமை வாய்ந்த 12 வீரர்கள் மற்றும் ஒரு டாக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8-ம் தேதி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் நான்கு பேரும் பயிற்சியாளரும் நேற்று மீட்கப்பட்டனர்.
இவர்களை மீட்கச் சென்ற அந்தக் குழுவில் இருந்த டாக்டர்தான், ரிச்சர்ட் ஹாரிஸ். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சலில் சிறந்தவர். இவர்தான், உடல்ரீதியாக யார் பலவீனமாக இருக்கிறார்களோ, அவர்களை முதலில் வெளியே அனுப்பலாம் என்று சொன்னவர். பின் மூன்று நாட்களாக குகைக்குள் தங்கிய ஹாரிஸ், சிறுவர்களின் உடலை பரிசோதித்து அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளித்திருக்கிறார். அனைவரும் மீட்கப்பட்ட பின் கடைசியாக குகைக்குள் இருந்து வெளியே வந்தவரும் அவர்தான்!
சிறுவர்களை மீட்ட சந்தோஷத்தை தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். மீட்கச் சென்ற வீரர்களை அவர்களை பாராட்டி வருகின்றன. இந்த மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய ஹாரிஸிக்கு நேற்று மாலை திடீர் சோகம். அவர் தந்தை ஜிம் ஹாரிஸ் இறந்துவிட்டார். இதையடுத்து உடனடியாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார் ஹாரிஸ். இவர் தந்தை ஜிம்மும் டாக்டர்தான்.
தாய்லாந்து செல்லும் முன் விடுப்பில் இருந்துள்ளார் ஹாரிஸ். அப்போது சிறுவர்களை மீட்கும் குழுவுக்கு அவரை பரிந்துரை செய்தது பிரிட்டனை சேர்ந்த நீச்சல் வீரர்கள். தகவல் தெரிந்ததும் உடனடியாக வருகிறேன் என்று புறப்பட்டுவிட்டார் ஹாரிஸ். ஹீரோவாக செயல்பட்ட ஒருவருக்கு திடீரென நேர்ந்த இந்த சோக சம்பவம் தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.