உலகம்

“விடாதே.. அடித்து கொல் நண்பா” - அரியவகை விலங்கை கொன்ற கொடூரன்

“விடாதே.. அடித்து கொல் நண்பா” - அரியவகை விலங்கை கொன்ற கொடூரன்

webteam

கரடி இனத்தை சேர்ந்த ‘வோம்பட்’ எனப்படும் பிராணியை கல்லால் அடித்தும், காலால் மிதித்தும் காவலர் ஒருவர் கொன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே பெனிசுலா பகுதியில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வேலான் ஜான்காக். இவர் கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி கார் பந்தயங்களிலும் பங்கேற்றுள்ளார். உடம்புகளில் டேட்டூக்களை குத்திக்கொள்ளும் பழக்கம் கொண்டவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் வேகமாக பரவி அனைவரிடமும் கண்டனங்களை பெற்றுள்ளது.

அந்த வீடியோவில் சட்டை, கால்சட்டை இன்றி அரைக்கால் சட்டையுடன் தோன்றும் ஜான்காக், கரடி இனத்தை சேர்ந்த ‘வோம்பட் என்ற பிராணியை காரில் இருந்து இறங்கி விரட்டிச் செல்கிறார். அதன் அருகே சென்றவுடன் தனது கைகளில் வைத்திருந்த கற்களைக் கொண்டு அந்தப் பிராணியை கடுமையாக தலையில் தாக்குகிறார். காரை ஓட்டி வரும் ஜான்காக்கின் நண்பர், இதைக்கண்டு உற்சாகமாய் கூச்சல் போடுகிறார்.  ‘விடாதே விரட்டி கொல்..கொல்’ என்று அவர் கத்துகிறார். அதன்பின்னர் கல்லால் அடித்தும், காலால் மிதித்தும் அந்தப் பிராணியை ஜான்காக் கொன்று விடுகிறார். பணியில் இல்லாத நேரத்தில் இந்தச் செயலை அவர் செய்துள்ளார். அதனைக் கொன்ற பின்னர் எதையோ சாதித்தது போல, அவர் சிரித்துள்ளார். அவருடன் சேர்ந்து காரில் இருந்த நண்பரும் சிரித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவ, பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் ஆஸ்திரேலியாவின் ‘வோம்பட்’ விழிப்புணர்வு தொண்டு நிறுவனம் ஒன்று இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்ததுடன், வீடியோ தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டு வருகின்றது. மேலும், விலங்குகள் நலவாரிய சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.