உலகம்

தனது 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கைதான பாட்டி - அப்படி என்ன செய்தார்?

தனது 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கைதான பாட்டி - அப்படி என்ன செய்தார்?

Sinekadhara

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏன் கைதானார் என்பது குறித்து போலீசாரே ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜீன் பிகெட்டன். முன்னாள் செவிலியரான இவர் தனது 100வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அதை வியத்தகும் வகையில் கொண்டாட நினைத்தார் ஜீன். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது திடீரென உள்ளே புகுந்த விக்டோரியா போலீசார் 3 பேர் ஜீனை கைதுசெய்தனர். அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றபோது, போலீசார் அவர்களை கூல் செய்து, மூதாட்டியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றவே கைதுசெய்ததாக தெரிவித்தனர். மேலும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது கைதாக வேண்டும் என்பதே ஜீனின் நீண்டநாள் ஆசையாக இருந்ததாகவும், அதை நிறைவேற்றவே கைதுசெய்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர்கள், ’’இதுபோன்ற கைதுகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்கிறோம். நிறைய பேர் தங்கள் வாழ்நாளை கைதாகாமல் வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஒரு நல்ல ஓட்டத்தை ஓடிய முன்னாள் செவிலியர் ஜீன் பிகெட்டன் சமீபத்தில் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். கைதாக வேண்டும் என்பது அவருடைய நீண்டநாள் ஆசை. இதுகுறித்து நாங்கள் தகவலறிந்தபோது ஜீனின் ஆசையை நிறைவேற்ற மோ காவல்நிலையத்தை சேர்ந்த எங்கள் குழு அவரது கொண்டாட்டத்தில் இடைபுகுந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மூன்று இளம் கான்ஸ்டபிள்ஸ் சைரன் ஒலிக்க பிறந்தநாள் பார்ட்டியில் நுழைந்து ஜீனின் கையில் விலங்குமாட்டி, அவர் சட்டப்பூர்வமாக கைதாகி இருப்பதாகக் கூறி அவரது ஆசையை நிறைவேற்றினர். இதுதான் தனது வாழ்நாளில் 'சிறந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஒன்று’’ என்று கூறியுள்ளார் ஜீன்.