வெனிசுலா நாட்டு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்துள்ளனர்.
வெனிசுலா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது அகேரிகுவா (Acarigua) நகரம். இங்குள்ள சிறையில் 250 கைதிகள் இருக்க முடியும். ஆனால், 540-க்கும் மேற்பட்ட கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கைதிகளை சந்திக்க வந்த பார்வையாளர்கள் சிலரை, பணயக் கைதிகளாக, கைதிகள் பிடித்து வைத்துக்கொண்டனர்.
இதுபற்றி தகவலறிந்ததும் சிறப்பு படை போலீசார் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். இதில் பல போலீசார் படுகாயமடைந்தனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். கையெறி குண்டு களும் வீசப்பட்டன. இதனால் சிறை கலவர பூமியானது. இந்த கலவரத்தில் 29 கைதிகள் கொல்லப்பட்டனர். கைதிகளின் தலைவன் எனக் கூறப்படும் வில்பிரடோ ரமோஸ் என்பவரும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
பல கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட போலீசாரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவில் சிறைகளில் கலவரம் நடப்பது புதிதில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாலன்சியா நகர் சிறையில் நடந்த கலவரத்தில் தீ வைக்கப்பட்டது. இதில் 68 கைதிகள் உயிரிழந்தனர். 2017 ஆம் ஆண்டு அமஸோனாஸ் மாநில சிறையில் நடந்த கலவரத்தில் 37 கைதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.