பாகிஸ்தான் ட்விட்டர்
உலகம்

நாளை பொதுத்தேர்தல்: இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகள்.. அச்சத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் இன்று, அடுத்தடுத்த நிகழ்ந்த திடீர் 2 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 26 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

அண்டை நாடான பாகிஸ்தானில் நாளை (பிப்.8) பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த பொதுத் தேர்தல் பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, அண்டை நாடான இந்தியாவிற்கும் மிகவும் முக்கியமானது ஆகும்.

இந்தத் தேர்தலில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நாளை, வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பாகிஸ்தானில் தேர்தல் முடிந்து 14 நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால், பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி, உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் தேர்தலில் போட்டியிடாதவகையில் சில வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் பாகிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு நிகழ்ந்து வருகிறது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், இன்று மட்டும் பலூசிஸ்தான் மாகாணத்தில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது.

இதில், மொத்தம் 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிஷினின் கானோசாய் பகுதியில் உள்ள சுயேட்சை வேட்பாளர் அஸ்பாண்ட் யார்கான் கக்கரின் தேர்தல் அலுவலகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், 14 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் பிஷின் நகர துணை காவல் ஆணையர் ஜூம்மா தாத் கான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “மதுரா கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டிய ஒளரங்கசீப்” - ஆர்டிஐ கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்!

இதேபோன்று கீலா சைபுல்லா பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்துக்குள் இரண்டாவது குண்டுவெடிப்பு அதே பலுசிஸ்தான் மாகாணத்தின் கிலா ஃசைபுல்லா நகரில் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு JUI-F என்ற கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. இதில், 12 பேர் உயிரிழந்ததாக கிலா ஃசைபுல்லா நகர துணை ஆணையர் யாசிர் பசாய் தெரிவித்துள்ளார். இவ்விரு குண்டுவெடிப்புகளுக்கும் இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தாலிபன், பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் ஆகியவை இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த இருவேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 26 பேர் இறந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதன் எதிரொலியாக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்கு காபந்து அரசின் உள்துறை அமைச்சர் கோஹர் இஜாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "மக்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது எனும் நோக்கில் தீய சக்திகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளனர். இது கோழைத்தனமான தாக்குதல். தீய சக்திகளின் நோக்கம் நிறைவேற ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாளை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தாக்குதல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கான் மாவட்டத்தில் உள்ள தேரா இஸ்மாயிலில், சோட்வா காவல் நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதும் 6 பேர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.