உலகம்

“ஈரானின் செயல்களை சகிக்க முடியாது”- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டி

“ஈரானின் செயல்களை சகிக்க முடியாது”- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டி

webteam

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்தது.

அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரானை அனுமதிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். ஈரானின் செயல்களை சகிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு தேவையில்லை. ஈரானுக்கு எதிராக ராணுவத்தை, ஏவுகணையை பயன்படுத்த அமெரிக்க விரும்பவில்லை. உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டவே அமெரிக்கா விரும்புகிறது” என தெரிவித்தார்.