model image x page
உலகம்

‘லீவு எடுத்துக்கோங்க..’ கம்பெனி CEO சொன்னபோதும் மறுப்பு தெரிவித்த இந்தியர்! வைரலாகும் பதிவு!

Prakash J

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல லட்சம் கடன்வாங்கியாவது அதிக சம்பளத்திற்கு வேலை செய்வதற்காக வெளிநாட்டிற்குப் பறக்கிறார்கள் பல இந்தியர்கள். இதிலும் பல இளைஞர்கள் தங்களுடைய குடும்பம், பின்னணி ஆகியவற்றை உணர்ந்து வேலை நேரத்தையும் தாண்டி கூடுதலாக உழைக்கின்றனர். அதன்மூலம் முதலாளிகளிடம் நற்பெயரும் பெறுகின்றனர்.

இது பரவலாக இந்தியர்களிடம் இருக்கும் குணம் என்பதால், வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியர்களை எளிதில் வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், நிறுவனம் ஒன்றில் விடுமுறையே எடுக்காமல் பணி செய்து வந்துள்ளார். இதையறிந்த அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வும் அவரை விடுமுறை எடுத்துக்கொள்ளச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், அதையும் அந்த இந்தியர் தவிர்த்துள்ளார். இந்தச் செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: வீடற்றவர்கள் விரட்டியடிப்பு | வன்முறையில் ஒலிம்பிக் நகரம்; ரசிகர்கள் தவிப்பு! பாரீஸில் நடப்பது என்ன?

ஆரோ [Arrow] என்ற தொழில்நுட்ப நிறுவனம், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியர் ஒருவர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், அந்த இளைஞர் வேலைக்குச் சேர்ந்தது முதல் விடுமுறையே எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறாராம். இந்த விஷயம் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் காதுக்குச் சென்றுள்ளது. இதனால் அசந்துபோன அவர், அந்த ஊழியருக்கு மெசேஜ் செய்து விடுமுறை எடுக்கக் கூறியிருக்கிறார்.

அவர் அனுப்பிய மெசேஜில், 'நீங்கள் வெகுநாட்களாக விடுப்பு எடுக்காமல் வேலை செய்வதாக நான் அறிந்தேன். எனவே நீங்கள் நிச்சயம் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்' என அனுப்பியுள்ளார். அதைப் பார்த்துப் பதிலளித்த அந்த இந்திய ஊழியர், 'எனக்கு விடுப்பு வேண்டாம் சார்.. நமது நிறுவனத்தின் பிராடக்ட் மார்க்கெட் தரத்தினை அடைய எனது உடல் படகுபோல செயல்படும்' எனச் சொல்லி அவரை மேலும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

இதனால், ஊழியரின் கடமை உணர்ச்சியை எண்ணி மனம் நெகிழ்ந்துள்ளார், சிஇஓ. தவிர, அவர்கள் இருவருக்குமான அந்த உரையாடலையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இந்திய இன்ஜினியர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், “எலான் மஸ்க் அந்த ஊழியரை தேடுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார். தவிர, இந்தப் பதிவு இதுவரை 5 மில்லியன் பார்வைகளையும் 88,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல் | களத்தில் நிற்கும் கமலா ஹாரீஸ்.. மவுனம் கலைத்த பராக் ஒபாமா!