ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வெளியிட்டார்.
மேலும் டெல் அவிவ் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதற்கான திட்டங்களை முன்னெடுக்கும்படியும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
2016ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது, தூகரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக அளித்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையாகக் கருத முடியாது என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில், இரு நாடுகளிடையே அமைதி ஏற்படுத்தவும், நிரந்தரத் தீர்வுக்கும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்குமென்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப்-ன் இந்த முடிவுக்கு அரபு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக சவுதி மன்னர் சல்மான், ஜெருசேலத்துக்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றினால் ஆபத்தான பின்விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்று எச்சரித்துள்ளார்.