பாகிஸ்தானில் இந்து மாணவி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ பெண்கள் கடத்தப்பட்டுக் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இந்த மதமாற்றம் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சீக்கிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்தபின், இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டார். இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இந்து மாணவி ஒருவரும் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண்)
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுக்கூர் மாவட்டத்தில் உள்ள ரோஹாரியை சேர்ந்தவர் ரேணு குமாரி. கடந்த மாதம் 29 ஆம் தேதி கல்லூரி சென்ற அவர், வீட்டுக்குத் திரும்பவில்லை. அவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள் ளதாக, அனைத்து பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரேணுவின் சகோதரர் கூறும்போது, ‘எனது சகோதரி ரேணு, உடன் படிக்கும் பாபர் அமன் என்பவருடன் பழகி வந்தார். அவர்தான் ரேணுவை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறோம்’ என்றார்.
(ரேணு குமாரி)
இந்த புகாரின் அடிப்படையில் அமனின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். ரோஹாரியில் சமீபத்தில் நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்று பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது.