உலகம்

நேற்று அதானி குழுமம்.. இன்று ஹாங்காங் நிறுவனம்! ஒரே அறிக்கையில் 5500 கோடியை இழந்த பரிதாபம்

நேற்று அதானி குழுமம்.. இன்று ஹாங்காங் நிறுவனம்! ஒரே அறிக்கையில் 5500 கோடியை இழந்த பரிதாபம்

webteam

ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஓர் அறிக்கை, அதானி குழுமத்தையே அடியோடு சாய்த்துள்ள நிலையில், அதேபோன்று ஒரு சம்பவம் ஹாங்காங்கிலும் நிகழ்ந்துள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் ஹார்ஸ்ட் ஜூலியஸ் புட்வில். கோடீஸ்வரரான இவர், டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் கோ என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனம் மோசடிகள் செய்து லாபத்தை ஈட்டியுள்ளதாக அதானிக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதுபோல், ஷாட் செல்லிங் நிறுவனமான Jehoshaphat Research அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், ”டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் கோ நிறுவனம் மோசடி வேலைகளில் ஈடுபட்டு லாபம் அடைந்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளது. ஷாட் செல்லிங் நிறுவனமான Jehoshaphat Research வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையால், டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் கோ நிறுவனம், கடந்த வாரத்தில் 4 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பை இழந்துள்ளது. இந்த அறிக்கைக்குப் பிறகு அதன் பங்குகளில் 19 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 9.6 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2008 நவம்பர் மாதத்திற்குப் பிறகு அந்த நிறுவனம் சந்தித்த பெரும் சரிவு எனக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போலி கணக்குகளைக் காட்டி மோசடியில் ஈடுபட்டு லாபம் திரட்டியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையினால், கடந்த இரண்டு நாட்களில் ஹார்ஸ்ட் ஜூலியஸ் தனது நிகர சொத்து மதிப்பில் 670 மில்லியன் டாலரை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், இந்த குற்றச்சாட்டை ஹார்ஸ்ட் ஜூலியஸின் நிறுவனமான டெக்ட்ரானிக் மறுத்துள்ளது.

மேலும், தனக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கும் Jehoshaphat Research நிறுவனத்தின்மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. உங்களுக்கு, இந்த விஷயங்கள் அனைத்தும் அதானி குழுமத்தை நினைவுப்படுத்துவதாக இருக்கலாம். தற்போது ஹார்ஸ்ட் ஜூலியஸின் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலராக இருப்பதாக, ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. Jehoshaphat Research நிறுவனம், உலக அளவில் பிரபலமானதாக இல்லை. அதேநேரத்தில் உலகின் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகளை ஆய்வுசெய்து வெளியிட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று சில நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளையும் Jehoshaphat Research நிறுவனம் வெளியிட்டுள்ளது.

- ஜெ.பிரகாஷ்