இங்கிலாந்தில், கடந்த 2003ஆம் ஆண்டு 33 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சாலையில், சாகும் நிலையில் விடப்பட்டுள்ளார். பின் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ மால்கின்சன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் தவறு செய்யாமலேயே இவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்திருப்பது தற்போதுதான் நீதிமன்றத்தில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையின் போதேவும் “நான் தவறு செய்யவில்லை; நிரபராதி” என வாதிட்டுள்ளார் அவர். ஆனால், போலீசார் அவருடைய பேச்சை நம்பவில்லை. தொடர்ந்து நீதிமன்றத்திலும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கேயும் அவருடைய பேச்சு நம்பப்படவில்லை. இதையடுத்து, தொடர்ந்து சிறைவாசத்தை அனுபவித்து வந்துள்ளார்.
இந்த வழக்குக்காக அவர் 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்துள்ளார். அதேநேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், சமீபத்திய DNA பரிசோதனையில் அவர் குற்றவாளியல்ல என்பது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, ஆண்ட்ரூவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக தாங்கள் வருந்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை ஆண்ட்ரூ ஏற்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து போலீசார், “ஆண்ட்ரூ தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இத்தனை காலம் போராடியிருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். எனினும், அவர் குற்றமற்றவர் என்பதற்கான சரியான சான்றுகள் தற்போதுதான் கிடைத்துள்ளன" என்கின்றனர்.
நீதி கிடைக்கப்பெற்றது குறித்து ஆண்ட்ரூ, “நான் பலமுறை தவறு செய்யவில்லை என்றபோதும் என்னைச் சுற்றியிருந்தவர்கள் நான் குற்றம் செய்ததாகவே கருதினார்கள். இப்போது இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன். ஆனால் வீடு, வேலை, வாழ்க்கை என அனைத்தையும் இழந்தவனாக நான் உணரப்படுகிறேன். இந்த உலகில் நான் எப்படி வாழ முடியும்? எனக்குப் பின்னால் ஒரு பெரிய வெற்றிடம் இருப்பதாக நம்புகிறேன். அதுவே என்னை விழுங்கிவிடும் எனப் பயப்படுகிறேன். நான் சிறையில் கழித்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். அங்கு கைதிகளிடமிருந்து பாதுகாப்பாய் இருந்தபோதும், என் மனதளவில் நான் பாதுகாப்பாக இல்லை. இருந்தாலும் சிறையில் பொழுதைக் கழித்தேன்” என்கிறார் வேதனையுடன்.
மகனின் சிறைவாசம் குறித்து ஆண்ட்ரூவின் தாயார் த்ரிஷா ஹோஸ், “இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்றாலும் அவர்களை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. இப்போது அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை திரும்பப் பெற முடியாது. இந்த பாதிப்பு அவனுடைய வாழ்நாள் முழுவதும் வருத்திக் கொண்டே இருக்கும். என் மகனைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நீதி மறுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் ஆண்ட்ரூ குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பெண்ணும் ஏமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார். தனக்கு அநீதி இழைத்தவர் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனையும் பெற்றுவிட்டார் என இருந்த அந்தப் பெண் இருந்த நிலையில், தற்போது ஆண்ட்ரூ விடுதலை செய்யப்பட்டதை அடுத்து உண்மையான குற்றவாளி யார் என தெரியாததால் அவர் மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.