Damian Wojnilowicz  Gwent Police
உலகம்

‘என்னா மனுஷன் யா..’ திருட சென்ற வீட்டில் துணி துவைத்து, சுத்தம் செய்து, சமைத்துவிட்டு சென்ற திருடன்!

திருட சென்ற திருடன், அவ்வீட்டை பெருக்கி மாஃப் போட்டு சுத்தம் செய்து, குப்பைகளை அகற்றி, பறவைகளைக்கு உணவளித்து, இருக்கும் வேலைகளை அனைத்தையும் செய்த பின்னர் சமைத்து வைத்துவிட்டு சென்ற சம்பவம் UK-ல் நடந்துள்ளது.

Rishan Vengai

UK-ல் டாமியன் வோஜ்னிலோவிச் என்ற 36 வயது நபர் ஒருவர், வேல்ஸ் நகரில் வேலைக்கு சென்றுவிட்ட பெண்ணின் வீட்டை உடைத்து திருடச்சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவர் எந்தவிதமான திருட்டிலும் ஈடுபடாமல், வீட்டிலிலுள்ள குப்பைகளை அகற்றி குப்பைத்தொட்டியை சுத்தமாக்கிவிட்டு, வீட்டை பெருக்கியதோடு மட்டுமில்லாமல், மாஃப் போட்டு வீட்டை சுத்தமும் செய்துள்ளார்.

அதற்குபிறகு வீட்டிலுள்ள பறவைகளுக்கு தீணியை வழங்கியது மட்டுமில்லாமல், காய்கறிகளை முறையாக அடுக்கி வைத்துவிட்டு, ருசியான உணவையும் சமைத்துள்ளார்.

பின்னர் அவ்வீட்டிலேயே குளித்த அவர், தன்னுடைய துணிகளை துவைத்து காயவைத்துவிட்டு, அது காய்வதற்குள் உணவருந்திவிட்டு வைன் அருந்தி பாட்டிலையும் காலிசெய்து அலமாறியில் அடுக்கிவைத்துள்ளார்.

தொடர்ந்து காய்ந்த தன்னுடைய துணிகளை அணிந்துகொண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட திருடன், “கவலைப்படாதே, சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இரு” என்ற குறிப்பையும் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அந்த பெண், வீட்டின் கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அதற்குபிறகு “என் சொந்த வீட்டில் இருக்கவே எனக்கு பயமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

அதேபோல 2வது வீட்டில் செய்தபோது சிக்கிய திருடன்..

முதல்முறை திருடச்சென்றதற்கு பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து நியூபோர்ட் என்ற இடத்தில் இரண்டாவது வீட்டில் அதேபோல நடவடிக்கையில் திருடன் டாமியன் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அந்தவீட்டின் உரிமையாளர்கள் செக்யூரிட்டி கேமராவை தங்களுடைய மொபைல் போனுடன் கனக்ட் செய்திருந்ததால் வீட்டிற்கு திருடன் வந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். பின்னர் உறவினருக்கு தகவல் சொல்லி காவல்துறையில் புகாரளித்ததின் பேரில், டாமியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Damian Wojnilowicz

அவர் நீதிமன்றத்தில் “நான் இரண்டு வீட்டில் செய்த நடவடிக்கைகளை ஒப்புக்கொள்கிறேன். சிறுவயது முதலே தங்குவதற்கு வீடில்லாததால் அப்படி நடந்துகொண்டேன். அதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த மன அச்சத்தை காரணம் காட்டி நீதிமன்றம் அவருக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.