ஹரி புத்தமகர் twitter page
உலகம்

”வாழ்க்கையே முடிஞ்சிட்டதா உணர்ந்தேன்”- செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை!

நேபாள நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Prakash J

வாழ்க்கை என்பது பல்வேறு திடீர் திருப்பங்களை கொண்டது. உற்சாகமாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் விபத்து போன்ற எதிர்பாராத விஷயங்கள் சட்டென்று நம்மை ஒரு இடத்தில் நிறுத்தி முடக்கிப் போட்டுவிடும். முடங்கிப் போன சூழலில் இருந்து மீண்டு வந்து பலரும் பல சாதனைகளை படைக்கத்தான் செய்கிறார்கள். அப்படித்தான் நேபாளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். யார் அவர்? எந்த இடத்தில் அவரது வாழ்க்கை முடக்கிப் போனது? அவர் அதில் இருந்து எப்படி மீண்டு வந்த மிகப்பெரிய சாதனை படைத்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

போரில் முடங்கிய வாழ்க்கையும்.. மீண்டு வந்த நேபாள வீரரும்!

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிச் சாதனை படைப்பதற்கு பலரும் விரும்புகின்றனர். இந்த சிகரத்தின் மீது ஏறிப் பலரும் வெற்றிக் கொடியை நாட்டியிருந்தாலும், மேலும் சிலர் வெவ்வேறு விதமான சூழல்களில் இருந்து எவரெஸ்ட்டில் ஏறிச் சாதனை படைக்கின்றனர். அந்த வகையில் இரண்டு கால்களையும் இழந்த ராணுவ வீரர், செயற்கை கால்கள் உதவியுடன் எவரெஸ்ட்டில் ஏறிச் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

யார் இந்த ராணுவ வீரர்?

நேபாளத்தைச் சேர்ந்தவர் ஹரி புத்தமகர். முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணுவத்துக்காகப் பணியாற்றிய சமயத்தில், ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்துள்ளார். இந்த நிலையில்தான் செயற்கை கால்கள் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிச் சாதனை படைத்துள்ளார். கடந்த 20ஆம் தேதி பிற்பகல், எவரெஸ்ட்டின் 8,848.86 மீட்டர் உச்சத்தை எட்டிச் சாதனை படைத்தார்.

”தற்கொலைக்குக்கூட முயன்றிருக்கிறேன்” - வலியை பகிர்ந்த நேபாள வீரர்!

எவரெஸ்ட்டில் ஏறிச் சாதனை படைத்தது குறித்து ஹரி புத்தமகர், “கால்களை இழந்த பிறகு எனது வாழ்க்கை முடிந்து விட்டதாக உணர்ந்தேன். ஒருகட்டத்தில், என் மனவலியைப் போக்குவதற்காகப் போதைக்கு அடிமையானேன். தவிர, இரண்டு முறை தற்கொலைக்குக்கூட முயன்றிருக்கிறேன். ஆனால், இந்த சாதனை மூலம் நம்பிக்கை துளிர்த்துள்ளது. என்றாலும், இது ஒரு கடினமான நேரம். நான், நேபாளத்தில் 19 வயதுவரை வளர்ந்தேன். அப்போது மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு செயல்படுகின்றனர்; நடத்தப்படுகின்றனர் என கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவர்களின் குறை முந்தைய ஜென்மத்தின் பாவம் என்றும், அவர்கள் பூமியின் பாரம் என்று பலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நானுமே நம்பினேன். ஏனெனில், நான் கண்டது அதைத்தான்.

நான், பள்ளிக்கு வெறும் கால்களுடன் நடந்து சென்ற சமயத்திலேயே எவரெஸ்ட் மீது ஏற நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. பின்னர், கால்களை இழந்தபிறகு 2018ஆம் ஆண்டு அதில் ஏறத் திட்டமிட்டேன். ஆனால், அதற்கு முன்பே, 2017ஆம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் ஆகியோர் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது. இதையடுத்தே, எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு மீண்டும் முயற்சி செய்தேன். அது, தற்போது வெற்றி அடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கண் தெரியாத இசைஞன் என்ற புகழ்பெற்ற நாவல் உண்டு. அந்த நாவலில் மக்ஸிம் மாமா என்ற கதாபாத்திரமும் நேபாள வீரரைப் போன்றதுதான். போரில் இரண்டு கால்களை இழந்த போதும் கூட கண் தெரியாத தனது மருமகனை (சகோதரியின் மகன்) ஆளாக்க வேண்டும் என்பதை தன்னுடைய வாழ்வின் லட்சியமாக கொண்டு அதனை செய்து முடிப்பார்.

நேபாள வீரரின் இந்த சாதனைப் பயணமானது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும். எதிர்பாராத தருணங்களில் வாழ்க்கை நம்மை முடக்கிப் போட்டுவிட்டால் அதற்காக அதற்காக கவலைப் படாமலும் தவறான முடிவுகளுக்கு சென்றுவிடாமலும் ஆக்கப்பூர்வமான ஏதேனும் செய்யவேண்டும் என்ற நம்பிக்கையை இவரது கதை சொல்கிறது.