அமித் ஷா, மியான்மர் எல்லை ட்விட்டர்
உலகம்

மியான்மர் ஊடுருவல்: எல்லைப் பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு.. அமித் ஷா உறுதி!

மியான்மர் நாட்டின் இந்திய எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலைத் தடுக்கும் வகையில், அந்நாட்டினை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Prakash J

மியான்மரில் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் முதல் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு தரப்புகளுக்கும் இடையேயான மோதல் கடந்த நவம்பர் மாதம் முதல் தீவிரமடைந்து வந்ததைத் தொடர்ந்து மியான்மரின் முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் மியான்மரில் அனைத்து வன்முறைகளையும் நிறுத்திவிட்டு அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாட்சி ஜனநாயகத்துக்கு திரும்பும்படி இந்தியா அழைப்புவிடுத்தது.

இந்த நிலையில், ’பாதுகாப்புச் சூழல் மிகவும் மோசமடைந்து வருவதால் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பாதுகாப்புச் சூழல் மிகவும் மோசமடைந்து வருவதாலும், தரைவழி டெலிபோன் உள்ளிட்ட தொலைதொடர்புகளில் ஏற்பட்டுள்ள தடைகள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளைக் கருத்தில்கொண்டு இந்தியர்கள் யாரும் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்குச் செல்ல வேண்டாம். ஏற்கெனவே ரக்கைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “மதுரா கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டிய ஒளரங்கசீப்” - ஆர்டிஐ கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்!

இந்த நிலையில், மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவலைத் தடுக்கும் வகையில், அந்நாட்டினை ஒட்டிய இந்திய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அந்தப் பதிவில், ‘எல்லைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் ரோந்து பாதையும் அமைக்கப்படும். வேலி அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்’ என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘இதில் ஏற்கெனவே மணிப்பூர் மாநிலத்தின் எல்லையை ஒட்டி மோரே பகுதியில் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டி இரு பகுதிகளிலும் 16 கிலோமீட்டர் வரை எந்த ஆவணமும் இன்றி சுதந்திரமாகச் சென்றுவர அனுமதிக்கும் தற்போதைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கருதப்படுகிறது. நாகலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 1,643 கி.மீ. தூர எல்லையை மியான்மர் பகிர்ந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.