fidel castro file image
உலகம்

638 முறை கொல்ல துடித்த அமெரிக்கா.. மரணத்தை வென்ற ஃபிடல் கேஸ்ட்ரோவின் கதை

கியூபா எனும் சின்னஞ்சிறு தீவில் ஒரு கரும்பு தோட்டத்தில் பிறந்து பின்னாட்களில், ஒரு பெரும் போராளியாக, கம்யூனிச தலைவராக மாறிய ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல நடத்தப்பட்ட சதித்திட்டங்கள், அதை காஸ்ட்ரோ எப்படி எதிர்கொண்டார் என்பதைப் பற்றி தொகுப்பில் காணலாம்.

யுவபுருஷ்

ஒருசில வரிகளில் கேஸ்ட்ரோ வாழ்க்கை!

அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் சிக்கி தவித்த கியூபாவை தன்னாட்சி கொண்ட ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்று போராட துவங்கிய ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் முயற்சியே தோல்விதான். இதனால் 1953ல் பட்டிஸ்டா அரசு ராணுவத்தால் கைதாகி 1955ல் விடுவிக்கப்படுகிறார். அதன்பிறகு சேகுவேராவோடு கைகோர்த்து, 1959ல் பட்டிஸ்டா அரசை வீழ்த்துகிறார். அதே ஆண்டு சோசலிச க்யூபாவின் பிரதமராகவும் மாறியவர் அது முதல் 1976 வரைக்கும் க்யூபாவின் பிரதமராகவே நீடிக்கிறார். அதற்கு அடுத்த காலகட்டத்தில், க்யூபாவின் அதிபராகவும் பதவி வகிக்க தொடங்கியவர் 2008ம் ஆண்டு வரை க்யூபாவின் அதிபராக இருந்தார்.

வெறும் 1000 கிலோ மீட்டர் நீளம், 100 கிலோமீட்டர் அகலத்தை மட்டுமே கொண்ட ஒரு சின்னஞ்சிரு தீவை, அமெரிக்காவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றால், அதற்கு முழுக்க முழுக்க ஃபிடல் காஸ்ட்ரோதான் காரணம். அமெரிக்காவின் பொருளாதார தடைகளை தாண்டி, கரும்பு சர்க்கரை ஏற்றுமதியால் ரஷ்யாவுடன் கைகோர்த்து க்யூபாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றினார் ஃபிடல்.

விமர்சனங்களும்.. சாதனைகளும்..!

சர்வாதிகாரி என்று விமர்சிக்கப்பட்ட இவரோட ஆட்சியில், கடுமையான தண்டனைகள், ஒற்றை ஆட்சிமுறை, அடக்குமுறைகள் போன்ற விமர்சனங்கள் கரும்புள்ளிதான். ஆனால், வல்லரசு நாடுகளைவிட குறைவான தாய் - சேய் இறப்பு விகிதம், அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி, மருத்துவத்துறையில மகத்தான சாதனை போன்றவை காஸ்ட்ரோ ஆட்சியின் சாதனைகளில் சில பக்கங்கள் ஆகும்.

638 முறை நடத்தப்பட்ட கொலை முயற்சிகள்!

உலகத்தலைவர்களிலேயே அதிக முறை ஒரு தலைவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்தது என்றால், அது ஃபிடல் காஸ்ட்ரோவுக்குத்தான். ஏனெனில் ஒன்றல்ல, இரண்டல்ல 638 முறை இவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்தேறின. ஆனால், அவை அனைத்துமே தோல்வியில்தான் முடிந்தது.

கேஸ்ட்ரோ வெளிநாடுகளுக்கு போகும்போது அவருக்கு ஐஸ் கிரீம், மில்க் ஷேக், டீ, காஃபி போன்ற பொருட்களில், அதிபயங்கரமான விஷயத்தை வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டது. அமெரிக்காவின் சிஐஏ உடைய இந்த முயற்சிகள் அனைத்தும் உண்மையில தோல்வியில்தான் முடிந்தது. ஒருமுறை கேஸ்ட்ரோ வெளிநாட்டுக்கு சென்று உரையாற்ற இருந்தார். அந்த போடியதிற்கு கீழே, 90 கிலோ எடையுடைய வெடிபொருட்கள் வைக்கப்படுகிறது. இருந்தாலும், கேஸ்ட்ரோவை கொல்லும் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.

கொல்ல வந்தவரிடம் துப்பாக்கி கொடுத்த ஃபிடல்!

ஒருமனிதனை எந்தெந்த வகையில் கொல்ல முடியுமோ, அத்தனை முறையிலும் அமெரிக்கா முயன்றார்கள். அதில், குறிப்பிட வேண்டிய விஷயம், கேஸ்ட்ரோ நியூயார்க்கிற்கு சென்றபோது அவருடைய சிகரெட்டில் வெடிமருந்துகளை வைத்து கொலை செய்ய முயன்றார்கள். எச்சரிக்கையாக இருந்த கேஸ்ட்ரோ லாவகமா தப்பிக்க, அதற்கு பிறகு 1985ல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையே கைவிட்டார்.

இன்னொரு விஷயம், என்வெனில் கியூபாவில் இருந்து வெளியேறிய ஒரு பெண்ணை வைத்தே கேஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்கா முயன்றது. ஐஸ்கிரீமில் மாத்திரைய கலந்து கேஸ்ட்ரோவுக்கு கொடுப்பது அல்லது தூங்கும்போது அவர் வாய்க்குள் திணிப்பது என்று திட்டமிடப்பட்டது. இதிலும் சுதாரித்துக்கொண்ட கேஸ்ட்ரோ, தன் ஒரு துப்பாக்கியை எடுத்து பெண்ணிடம் கொடுத்து சுட்டுவிடுங்கள் என்று சொல்ல, வாங்க மறுத்த அந்த பெண்மணி அதிர்ச்சியில், “என்னால இது முடியாது” என சொல்லியிருக்கிறார்

ஃபிடல் ஒரு போராட்டத்தின் வரலாறு!

இத்தனை முயற்சிகளையும் கடந்து தன்னை கொலை செய்ய முயன்ற 10 அமெரிக்க அதிபர்களுடைய ஆட்சிகாலத்தை க்யூபாவின் தலைவராக இருந்து பார்த்த கேஸ்ட்ரோ, கடந்த 2016ம் ஆண்டு இயற்கையான முறையில் மரணிக்கிறார். இந்த நேரத்தில், ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுகூரலாம். அதாவது நேர்காணல் ஒன்றில் பேசிய கேஸ்ட்ரோ, “கொலை முயற்சிகள்ல இருந்து தப்பிக்கிறது ஒலிம்பிக் விளையாட்டுல சேர்க்கப்பட்டா, அதுல நான்தான் கோல்ட் மெடல் வாங்குவேன்” எனு தன் மீது நடந்த கொலை முயற்சிகளை சிரித்தபடி சொல்லி கடந்துபோகிறார்.

ஃபிடல் காஸ்ட்ரோ எனும் பெயர் ஒரு தனி மனிதன் கிடையாது. அது ஒரு மாபெரும் போராடத்தின் வரலாறு என்பதை மறுப்பதற்கில்லை. அவரின் நினைவுநாளான இன்று மட்டுமல்ல, என்றென்றும் போராளிகள் கேஸ்ட்ரோவை நினைவு கூர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

- யுவபுருஷ்