அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அதிபராக உள்ளார். அடுத்த ஆண்டுடன் அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.
அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவருக்கு எதிராக சககட்சியின் மூத்த நிர்வாகியான நிக்கி ஹாலேவும் போட்டியிட உள்ளதாக அறிவித்து முறைப்படி பரப்புரையை தொடங்கினார். இதுதொடர்பான நிகழ்ச்சியில் பேசிய நிக்கி, புலம்பெயர்ந்த இந்தியரின் மகள் என்பதில் தாம் பெருமைகொள்வதாகவும், நாட்டின் நிதிப் பொறுப்பை மீட்டெடுக்கவும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நேரம் வந்துவிட்டதாகக் கூறினார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேவுக்கு தற்போது 51 வயதாகிறது. பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் குடும்பம், முதலில் கனடாவில் குடியேறி பின்னர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்த நிக்கி, அம்மாகாண ஆளுநராக 39 வயதில் பதவியேற்றார். அத்துடன், ’அமெரிக்காவின் இளம் ஆளுநர்’ என்ற சாதனையையும் படைத்தார். இந்த மாகாணத்தில் இரண்டு முறை ஆளுநராக இருந்தவர் நிக்கி.
மேலும், டிரம்ப் அதிபராக இருந்த காலக்கட்டத்தில் ஐநா சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாகவும் நிக்கி ஹாலே பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் டிரம்பின் தீவிர ஆதரவாளராகவும், அவருடைய வெற்றிக்காகவும் உழைத்த நிக்கி, தற்போது அவருக்கு எதிராகவே களம் இறங்கியிருப்பது அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
- ஜெ.பிரகாஷ்