ஜோ பைடன் Vs டொனால்டு டிரம்ப் முகநூல்
உலகம்

அமெரிக்கா | அதிபர் தேர்தலிலிருந்து விலகினார் ஜோ பைடன்!

சொந்தக் கட்சிக்குள்ளேயே கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தங்களால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து, தற்போதைய அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகினார்.

PT WEB

செய்தியாளர்: ஜி.எஸ். பாலமுருகன்

சொந்தக் கட்சிக்குள்ளேயே கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தங்களால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து, தற்போதைய அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகினார்.

இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகிறார். தடுமாற்றம், திணறல், அதிரடி கேள்விகள், துப்பாக்கிச்சூடு என அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் விறுவிறுப்பாக உள்ளது. நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், 81 வயதான அதிபர் ஜோ பைடன், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டார்.

குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். வயது முதிர்வு காரணமாக பைடனின் செயல்திறனில் சுணக்கம் ஏற்பட்டது. தேர்தல் பிரசாரங்களில் மிகவும் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். மேலும் டிரம்புடனான முதல் நேரடி விவாதத்தின்போதும் விழிபிதுங்கினார். டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பைடன் திணறினார். இது விமர்சனத்திற்கு வழிவகுத்ததோடு, சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களையே அதிருப்தியடைய செய்தது.

மேலும், அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டும் வந்தார். இதனால் பைடனை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தன. எனினும், வேட்பாளராக தான் தொடர்வதாக பைடன் கூறிவந்த நிலையில், அழுத்தம் அதிகரிக்கவே தற்போது அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். அறிக்கை வெளியிட்டுள்ள ஜோ பைடன், அமெரிக்க அதிபராக பணியாற்றுவது தனக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கெளரவமாகும் என்று கூறியுள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது நோக்கமாக இருந்தாலும், நாட்டு மக்கள் மற்றும் கட்சியின் நலனுக்காக தேர்தலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள தனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் விரைவில் விரிவாகப் பேசுவதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். தன்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு நன்றி தெரிவித்துள்ள பைடன், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அவருக்கு முழு ஆதரவை வழங்க விரும்புவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இம்முறை ஜனநாயகக் கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி டிரம்பை வீழ்த்த வேண்டும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஜோ பைடன் முன்மொழிந்துள்ள நிலையில், சிகாகோவில் அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளார். கமலா ஹாரிஸ்-க்கு அனைத்து வகையிலும் ஆதரவு தெரிவிப்பதாக, அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்தவரான முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் 25 எம்.பி.க்கள், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் சபாநாயகர் நான்சி பொலோசி மட்டுமன்றி, குடும்ப உறுப்பினர்களும் ஜோ பைடன் விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அவருக்கு பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால், டிரம்ப் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்ற பேச்சு எழுந்தது. இதனால்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிடிவாதமாக இருந்த பைடன் மனம்மாற காரணமாக அமைந்துள்ளது.