அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு அவரது மனைவி ஜில் பைடனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிபர் பதவிக்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஜோ பைடன் மீண்டும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லாஸ் வேகாசில் பரப்புரையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் டெல்வாரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அலுவலகப் பணிகளை மேற்கொள்வார் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தாம் நலமுடன் இருப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஜோ பைடனின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.