அமெரிக்க அதிபர் தேர்தல் முகநூல்
உலகம்

உலகமே உற்று நோக்கும் ‘அமெரிக்க அதிபர் தேர்தல்’ பற்றிய முக்கிய தகவல்கள் இதோ!

அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் உலகமே உற்று நோக்கும் இந்த தேர்தல் குறித்து முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.

PT WEB

அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் உலகமே உற்று நோக்கும் இந்த தேர்தல் குறித்து முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், 248 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார். அதிபர் பதவியை வகிக்கும் முதல் கறுப்பினப்பெண், குறிப்பாக தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவராகவும் திகழ்வார்.

டொனால்ட் ட்ரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் குற்ற வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் அதிபரானதாக வரலாறு படைப்பார். முன்னதாக கடந்த 5 மாதங்களுக்கு முன் ட்ரம்ப் நியூயார்க்கில் பண முறைகேடு புகாரில் 34 குற்றப்பிரிவுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். மேலும் 2 குற்ற வழக்குகளில் அவர் வழக்கை எதிர்கொண்டுள்ளார். ஆனால் அரசியல்மயமாக்கப்பட்ட நீதித்துறையால் தாம் பாதிக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறிவருகிறார்.

அமெரிக்காவில் தேர்தல் நாள் என்பது தேர்தல் வாரமாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாகாணமும் தங்களுக்கென தனி விதிகள், வாக்கு எண்ணிக்கை முறைகளை கடைபிடிக்கின்றன. இதனால், முடிவுகளில் தாமதமாகலாம்.

உண்மையில் வெற்றியாளர் யார் என்பது எப்போது அறிவிக்கப்படும் என்பதை எளிதில் சொல்லிவிட முடியாது . 2020 தேர்தலில் ஜோபைடன்தான் வெற்றியாளர் என்பதை தேர்தல் முடிந்த 4 நாட்களுக்குப்பிறகு அசோசியேட் பிரஸ் அறிவித்தது.

2016 தேர்தலிலோ, வாக்குப்பதிவு முடிந்த அன்றைய நாள் அதிகாலை இரண்டரை மணி அளவிலேயே வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இந்த முறை வெற்றியாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

இந்நிலையில், 2020 தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியிருக்கக்கூடாது என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 2020 தேர்தல் முடிவுகளுக்குப்பின் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், ட்ரம்ப்பின் தற்போதைய பேச்சு, அவர் தோல்வி ஏற்பட்டால் அதனை ஏற்காமல் பிரச்னை செய்வார் என்பதை காட்டுவதாக ஒரு அச்சம் நிலவுகிறது.