அசாதாரண ரத்தநாள பிரச்னையால் பாதிக்கப்பட்ட கருவிலிருக்கும் குழந்தைக்கு மூளை அறுவைசிகிச்சை செய்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள். இந்த அரிய பிரச்னையை ”Venus of Galen malformation(VOGM)” என்று அழைக்கின்றனர். இந்த அறுவைசிகிச்சையானது ப்ரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனை மற்றும் போஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் வைத்து நடைபெற்றுள்ளது.
மூளையிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை கொண்டுசெல்லும் ரத்தநாளங்கள் முழுமையாக உருவாகாதபோது இந்த பிரச்னை ஏற்படுகிறது. இந்த குறைபாட்டால் அதிக அளவு ரத்தமானது நரம்புகள் மற்றும் இதயத்தில் அழுத்தத்தை கொடுக்கிறது. மேலும் இது பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது என்கின்றன செய்திக்குறிப்புகள்.
அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய இந்த அரிய அறுவைசிகிச்சை குறித்து சிபிஎஸ் செய்தி இதழில் விளக்கப்பட்டுள்ளது. அதில், முதலில் தாயின் வயிற்றில் மற்ற குழந்தைகளைப் போலத்தான் டென்வெரும் வளர்ந்திருக்கிறாள். பின்னர் அல்ட்ராசவுண்ட் சோதனையின்போது குழந்தையின் மூளையில் அசாதாரண ரத்த நாள பிரச்னை இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட நிறையக் குழந்தைகளுக்கு இதய செயலிழப்பு அல்லது மூளை சேதமடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். பெரும்பாலும் அவர்கள் உயிர்பிழைக்கமாட்டர். அதேபோலத்தான் டென்வெரின் இதயமும் இந்த குறைப்பாட்டால் போராடிக் கொண்டிருந்தது.
இதனையடுத்து கர்ப்பகாலத்தின் 34வது வாரத்தில், போஸ்டன் குழந்தைகள் மற்றும் ப்ரிகாம் மருத்துவக்குழுவானது கருவிலிருக்கும் குழந்தையின் மூளையிலிருக்கும் பிரச்னையை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியது. அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் உதவியுடன், அம்னியோசென்டெசிஸுக்குப் பயன்படுத்தப்படுவதைப் போன்ற ஒரு ஊசியைப் பயன்படுத்தி, ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்த, அசாதாரண ரத்த நாளங்களில் சிறிய சுருள்களை நேரடியாக பொருத்தி வெற்றிகரமாக சிகிச்சையை முடித்திருக்கிறது.
பெரியளவிலான மூளை காயங்கள் மற்றும் பிறந்த குழந்தைக்கு இதயம் செயலிழத்தல் போன்றவை மிகப்பெரிய சவால்கள் என்கிறார் போஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் கதிரியக்க மற்றும் VOGM நிபுணரான, டேரன் ஓர்பாக்( Darren Orbach). பொதுவாக இந்த பிரச்னை உள்ள குழந்தைகள் பிறந்தவுடன், சிறிய சுருள்களைச் செருகுவதற்கு ஏதுவாக வடிகுழாயைப் பயன்படுத்தி, ரத்த ஓட்டத்தை மெதுவாக்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் இது தாமதமானதாகவே கருதப்படுகிறது என்கிறார் டேரன்.
இருப்பினும், இந்த VOGM பிரச்னையால் பாதிக்கப்பட்ட 50 - 60% குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவுகள் ஏற்படுகிறது. மேலும் அவர்களிடையே இறப்பு விகிதம் 40 சதவீதமாக இருப்பதாக தெரிகிறது. அப்படி உயிர் பிழைக்கும் குழந்தைகளில் பாதி பேருக்கு கடுமையான நரம்பியல் மற்றும் அறிவாற்றல் பிரச்னைகள் ஏற்படுகிறது என்கிறார் டேரன்.
மூளைக்குள் ரத்த நாளங்கள் அசாதாரணமாக மாறும் ஒரு வகை அரிய பிரச்னைதான் vein of Galen malformation. மூளையில் உள்ள சரியான வடிவில் இல்லாத தமனிகள் தந்துகிகளுடன் இணைவதற்குப் பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணைகின்றன. இது ரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது. இதைத்தான் VOGM என அழைக்கின்றனர். இதனால் நரம்புகளில் ரத்தமானது உயர் அழுத்தத்தை கொடுக்கிறது. நரம்புகளில் கொடுக்கப்படும் இந்த அதிகப்படியான அழுத்தமானது பல்வேறு மோசமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.