அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், ட்ரம்ப் தம்முடைய ஆட்சியில் யார் யாருக்குப் பங்கு கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், அவருடைய பாதுகாப்பு குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அதிகம் வசிக்கமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் இருக்கும் வெள்ளை மாளிகை என்பது அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாகக் கருதப்படுகிறது. மொத்தம் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வெள்ளை மாளிகையில், 130க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. அதிபரைப் போலவே, அவரது குடும்பத்தினருக்கும் இந்த வெள்ளை மாளிகையில் செல்வாக்கு உண்டு. இந்தச் சூழலில் அதில் அதிக நேரம் வசிக்க, மெலனியா மறுத்திறுப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் முதல் பெண்மணியான (அதிபரின் மனைவி என்பதால் இந்த அங்கீகாரம்) தனது இரண்டாவது பயணத்தில், நியூயார்க் நகரம் மற்றும் புளோரிடாவின் பாம் பீச் இடையே தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் வெள்ளை மாளிகையில் இல்லாத போதிலும், ட்ரம்ப் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் மெலானியா, தன் சொந்தத் தேவைகளுக்காகக் கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள், “மெலனியா ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளாக புளோரிடாவில் ஒரு வாழ்க்கை மற்றும் நட்பு வட்டத்தை வளர்த்துக் கொண்டார். ஆகவே தற்போது அவர் தொடர்ந்து நிறைய நேரத்தை அங்கேயே செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, அவருடைய மகனின் கல்வி விஷயத்திலும் கவனம் செலுத்துவதற்காக அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிகிறது. எனினும், இதனால் அதிபர் குழுவினுள் பின்னடைவு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மெலனியா, “இந்த முறை எனக்கு பதற்றம் இல்லை. நான் பதற்றம் இல்லாமல் வெள்ளை மாளிகைக்குச் செல்ல உள்ளேன். வெள்ளை மாளிகையில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். இந்த முறை அனுபவத்தோடு செல்வதால் பிரச்னை இல்லை” என தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ட்ரம்ப் ஆட்சியில் இருந்தபோதும் மெலனியா, எல்லா நாளும் வெள்ளைமாளிகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மெலனியா ஆரம்பத்தில் வெள்ளை மாளிகைக்குச் செல்லவில்லை. தனது இளைய மகனுடன் இருக்க நியூயார்க்கில் தங்கினார். அதேநேரத்தில், ட்ரம்ப் பின்னால் இருந்தே மெலனியா செயல்படுவார்.
கடந்த ஆட்சி முறையிலும் இதேபோல் செயல்பட்ட நிலையில், இந்த முறையும் மெலனியா அதிகமாக பொது இடங்களில் தோன்ற மாட்டார் எனக் கூறப்படுகிறது. கடந்த காலத்தில் இருந்த முதல் பெண்மணிகளோடு ஒப்பிடுகையில், மெலனியா எதிலும் தலையிடாத, மிகவும் அமைதியானவராகத் தெரிந்தார். முந்தைய முதல் பெண்மணிகளைப்போல இவர் பொது விவகாரங்களில் அதிகம் தலையிடவில்லை. போலவே முந்தைய ஆட்சிக் காலத்தின்போது வெள்ளை மாளிகையிலோ அல்லது பரப்புரைகளிலோ அரிதாகவே உரைகளை நிகழ்த்துவார். சமீபத்திய ஆண்டுகளில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட பரப்புரை செய்தபோது பல சட்டச் சவால்களை எதிர்கொண்டதால், மெலனியா பொதுவெளியில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.