delta flight twitter
உலகம்

அமெரிக்கா: விமானத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயணி! அலட்சியத்தில் விமான ஊழியர்கள்!

விமானத்தில் பயணி ஒருவர் தன் அருகே இருந்த தாய் மற்றும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

கடந்த 26ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஜேஎப்கே விமான நிலையத்தில் இருந்து கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு டெல்டா என்ற விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதில் பயணித்த ஆண் பயணி ஒருவர், விமானத்தில் தரப்படும் மதுவை, 11 முறை அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்நபர் தனக்கு அருகே அமர்ந்திருந்த டீனேஜ் சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

delta flight

இதுகுறித்து தாயும் மகளும் விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் ‘நீங்கள் பொறுமையாக இருங்கள்’ எனக் கூறியதுடன், இந்த சம்பவத்திலும் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால் அந்த நபரின் தொல்லை எல்லைமீறிப் போயிருக்கிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களுக்கு இருக்கையை மாற்றிக்கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனாலும் விமான ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுள்ளனர். தொடர்ந்து அவருக்கு மதுவும் கொடுத்துள்ளனர். இதைப் பார்த்த மற்றொரு ஆண் பயணி, அந்த சிறுமிக்கு தனது இருக்கையை மாற்றிக் கொடுத்துள்ளார்.

அவர் போதையில் இருந்த நபருக்கும், சிறுமியின் தாய்க்கும் இடையில் அமர்ந்து பயணித்துள்ளார். பின்னர், விமானம் தரையிறங்கியபோது, விமான ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கும், மகளுக்கும் 5,000 கிமீ இலவச பயணம் செய்வதற்கான சலுகையை வழங்குவதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால், தவறு செய்த பயணி மீதான நடவடிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தாய், மகள் சார்பில் விமான நிறுவனத்துக்கு எதிராக மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயணி தவறு செய்யும்போது விமான நிறுவனம் அலட்சியமாக இருந்ததற்காக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2 மில்லியன் டாலர் வழங்கவேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் விமான நிறுவனம் மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இச்சம்பவம் ஜூலை 26, 2022-ல் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதுதான் வழக்காக தொடரப்பட்டுள்ளது.