வில்லியம் ஆண்டர்ஸ் கூகுள்
உலகம்

விமான விபத்தில் உயிரிழந்த விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ்!

Jayashree A

விண்வெளி வீரர்களில் ஒருவரான வில்லியம் ஆண்டர்ஸ் விமான விபத்தில் இறந்தார்.

நிலவில் தரையிறங்கியவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், என்று நமக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்னதாகவே அமெரிக்காவின் நாசா 1968 டிசம்பர் 21ம் தேதி நிலவிற்கு அப்பல்லோ 8 என்ற விண்கலத்தை அனுப்பி சோதனை மேற்கொண்டது. இச்சோதனையில், ஃப்ராங்க் போர்மன், ஜேம்ஸ் லால் மற்றும் வில்லியம் ஆண்டர்ஸ் என்ற விஞ்ஞானிகள் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு பயணம் மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் நிலவில் தரையிறங்காமல் நிலவை 10 முறை வலம் வந்தனர். இந்த சோதனை வெற்றியடைந்த பின்னர் தான் நாசா நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவிற்கு அனுப்பியது.

இதில், அப்பல்லோ8 விண்கலத்தில் பயணம் செய்த விஞ்ஞானிகளில் ஒருவரான வில்லியம் ஆண்டர்ஸ் என்பவருக்கு தற்பொழுது வயது 90 ஆகிறது. இவர் கடந்த வெள்ளியன்று தனக்கு சொந்தமான விண்டேஜ் விமானப்படையின் (ஒற்றை இயந்திர) T34 என்ற சிறியரக விமானத்தில், வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவுகளுக்கிடையே உள்ள சான் ஜூவான் தீவுகளின் ஒரு பகுதியான ஜோன்ஸ் தீவில் பயணம் மேற்கொண்டபொழுது, விமானமானது தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே வில்லியம் ஆண்டர்ஸ் இறந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, விமானத்தை வில்லியம் ஆண்டர்ஸ் இயக்கியதாகவும், இந்த விமானமானது கட்டுப்பாடு இழந்து அருகில் உள்ள கடற்கரைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இருப்பினும் விமானத்தில் ஏற்பட்ட கோளாரால் விபத்துக்குள்ளானதா? அல்லது வில்லியம் ஆண்டர்ஸ்க்கு ஏதேனும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துகுள்ளானதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும் இவர் பயணப்பட்டதாக கூறப்பட்ட சிறியவகை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கும் வீடியோகாட்சி ஒன்று சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.