நீரை சேமிக்கும் மக்கள் pt web
உலகம்

அமேசான் நதிகளிலேயே வறட்சி... வரலாறு காணாத பேரழிவின் தொடக்கமா? தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள்

அமேசான் நதிகளிலேயே தண்ணீர் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வரலாறு காணாத வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர் மட்டம் குறைந்து அமேசான் பகுதி கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

Angeshwar G

வரலாறு காணாத வறட்சி

கடந்த சில தினங்களுக்கு முன் பிரேசிலிய புவியியல் சேவை, அமேசான் படுகையில் உள்ள அனைத்து ஆறுகளும் வரலாறு காணாத அளவில் குறையும் என்றும் இதனால் உள்ளூர் சமூக மக்கள் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது. இத்தகைய சூழலில், அமேசான் மழைக்காடுகளின் வழியாக செல்லும் ஆறுகளில் நீர்மட்டம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

வழக்கமாக ஜூன் கடைசி வாரத்தில் இருந்து ஜூலை முதல் வாரத்தில் இங்கே வறட்சிக் காலம் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில், ஜூன் முதல் பாதியிலேயே நீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சராசரியை விட குறைவாக காணப்படுகிறது. நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை அமேசான் பகுதிகள் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவை பெற்றுள்ளது.

வறட்சி காரணமாக ஆறுகளில் பயணம் மேற்கொள்வது கடுமையாக இருப்பதாகவும், நீர் உட்கொள்ள முடியாத அளவிற்கு கலங்கலாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக வெளியில் இருந்து வரும் நீரை நம்பியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்

இப்பகுதிகளில் வசிக்கும் வயதானவர்கள் கூறுவது இன்னும் மோசமானதாக இருக்கிறது. 57 வயதான மீனவர் இதுதொடர்பாக கூறுகையில், “இங்கிருக்கும் வயதானவர்கள் யாரும் இதுபோன்ற வறண்ட நதியைக் கண்டதில்லை. என் தந்தை கூட இதுபோன்று தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என கூறினார்” என்றுள்ளார். ஏனெனில், 121 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக இதுபோன்ற வறட்சி அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வறண்ட கால நிலையால், அங்கு காட்டுத்தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக, மோட்டார் படகுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆறுகளில் நீர் குறைந்தது, தங்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும், விளைப்பொருட்களை நகரங்களுக்கு கொண்டு செல்வது சாத்தியமற்று இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏனெனில், அப்பகுதி மக்களுக்கு ஆற்றுப் பயணங்களே மிக வசதியானதாக இருக்கிறது. சாலைப் போக்குவரத்து என்றால், அடர்ந்த மழைக்காடுகளுக்கு ஊடாக செல்லும் மண் சாலைகள் மட்டுமே உள்ளன.

ஆறுகளை நம்பி மீன்பிடிக்கும் தொழிலை செய்யும் சமூகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளும் பயிர்களுக்கு தண்ணீர் இன்று சமீப நாட்களில் தத்தளித்து வருகின்றனர்.

இருக்கும் தண்ணீரும் அதிகளவில் சூடாக காணப்படுவதால் நீர்வாழ் உயிரினங்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கவலை அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் பேரழிவிற்கான சாத்தியமாகவும் இதைக் கருதுகின்றனர்.