உலகம்

ஆர்டர் செய்ததோ ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்..வந்ததோ நாயின் உணவு - அமேசானால் அதிருப்தி

ஆர்டர் செய்ததோ ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்..வந்ததோ நாயின் உணவு - அமேசானால் அதிருப்தி

Sinekadhara

பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்யும் பொருட்களின் தரம் குறித்து நிறைய புகார்கள் எழுவதுண்டு. சில நேரங்களில் ஆர்டர் செய்வது ஒன்று கிடைத்தது ஒன்றாக இருப்பதாகவும் சிலர் பகிர்வதுண்டு. அந்த வரிசையில் ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவு பார்சலை அனுப்பி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம். இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான அந்த நபர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் ஐடி மேனேஜரான ஆலன் வூட் என்ற நபர், நவம்பர் 29ஆம் தேதி அமேசானில் தனது மகளுக்காக ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள MacBook Pro ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். அதுவும் அடுத்தநாளே டெலிவரி வேண்டுமென ஆர்டர் செய்துள்ளார். அதேபோல் அடுத்தநாள் பார்சல் வந்திருக்கிறது. மேக்புக் என திறந்துபார்த்தபோது, அந்த பார்சலில் இரண்டு Pedigree நாய் உணவு இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆலன், ஒருவேளை ஆர்டர் மாறியிருக்கலாம் என மனதை தேற்றிக்கொண்டு அமேசானை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் முதலில் அவருக்கு பணத்தை திருப்பித்தர மறுத்திருக்கிறது அமேசான். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக அமேசான் தனது தவறை ஒப்புக்கொண்டு ஆலனிடம் மன்னிப்பு கோரியதுடன், பணத்தை திருப்பி தருவதாகவும் உறுதியளித்திருக்கிறது.

தனது மோசமான அனுபவம் குறித்து ஆலன், மெட்ரோ இதழுக்கு அளித்த பேட்டியில், “ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள மேக்புக்கிற்கு பதிலாக பார்சலை திறந்தவுடன் நாய் உணவை பார்த்தபோது எனது முக பாவனை எப்படி மாறியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆரம்பத்தில் இந்த குளறுபடி சரியாகிவிடும் என நான் நினைத்தேன். ஆனால் அமேசான் கஸ்டமர் சர்வீஸிடம் பேசியபிறகே நிலைமையை புரிந்துகொண்டேன். என் கைக்கே வராத லேப்டாப்பை ரிடர்ன் செய்யும்வரை அவர்களால் எனக்கு உதவ முடியாது என கூறிவிட்டனர். எனக்கு வந்த நாய் உணவு பார்சலை அவர்களுக்கு திருப்பி அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

15 மணிநேரத்திற்கும் அதிகமாக அமேசான் கஸ்டமர் சர்வீஸின் நிர்வாகிகள் மற்றும் மேனேஜர்களிடம் பேசினேன். ஆனால் அவர்கள் எனது அழைப்பை அடுத்த டிபார்ட்மெண்ட்டுகளுக்கு மாற்றிவிட்டனர். இருப்பினும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ஒரே மாதிரியாகவே முடிந்தன” என்று கூறினார்.

இதுகுறித்து அமேசான் செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது, அவர் ஆலனிடம் மன்னிப்பு கோரினார். மேலும், தற்போது அந்த கஸ்டமரிடம் நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும், மன்னிப்புக் கேட்டதாகவும் மற்றும் பிரச்னையை முடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.