உலகம்

‘டிக்டாக்’ செயலியை கண்காணிக்க 500 பேர் கொண்ட குழு

webteam

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இயங்கிவரும் ‘பைட் டான்ஸ்’என்ற தொழில்நுட்ப நிறுவனமே தற்போது இளைஞர்களின் கைகளில் புரளும், டிக்டாக், ஹலோ, விகோ லைட் போன்ற செயலிகளை அளித்து வருகிறது. 

இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ‘டிக்டாக்’ செயலியில் வீடியோக்களை லிப் சிங் செய்து பாடலுக்கு ஏற்ப நடித்து, நடனமாடி இவற்றில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் அதிக லைக், ஷேர்களை பெற வேண்டும் என்பதற்காகவும், பயனர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் விபரீத செயல்களில் ஈடுபட்டு உயிரையும் ‌மாய்த்து கொள்வதும் உண்டு. 

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, இந்தி, மராத்தி உள்ளிட்ட 11 இந்திய மொழிகளிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் ‘டிக்டாக்’ இயங்குகிறது. 

இப்படி மிகக்குறுகிய காலத்தில் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘டிக்டாக்’ மீது அடுக்கடுக்கான புகார்களும், கண்டனங்களும் எழுந்தன. பல எதிர்ப்புகளை மீறி, இளைஞர்களின் அமோக ஆதரவால் 120 கோடி பயனர்களை தன்னுள் வைத்து இளைய தலைமுறையி‌னரை ஆட்டி வைத்து வருகிறது இந்தச் செயலி. 

‘டிக்டாக்’கில் பதிவிடப்படும் வீடியோக்கள் கலாசார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து இந்நிறுவனம் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் வீடியோக்களை பதிவிட தடை விதித்தது. மேலும் பயனர்‌களுக்கான நேரக் கட்டுப்பாட்டையும் ‘டிக்டாக்’ கொண்டுவந்தது. தன்னை இந்தியாவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் விதிகளை மீறி பதிவேற்றம் செய்யப்பட்ட சுமார் 60 லட்சம் வீடியோக்களை அந்நிறுவனம் அதிரடியாக நீக்கியது. 

உலக அளவில் 50 அலுவலகங்களைக் கொண்டு செயல்படும் ‘டிக்டாக்’, இந்தியாவில் மும்பை ‌மற்றும் டெல்லியில் தனி அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘டிக்டாக்’ செயலியை பயன்படுத்துவோரை கண்காணிக்கவும், பதிவிடும் வீடியோக்களுக்கு அனுமதி வழங்கவும் 500 பேர் கொண்ட பணியாளர்கள் குழு 24 மணி நேரமும் பணியாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து டிக்டாக் பயனர்களுக்கு கடவுச்சொல் அளிக்கவும், தற்கொலை எண்ணத்துடன் வீடியோ பதிவிடுபவர்களுக்கு கவுன்சிங் அளிக்கவும்‌ ‘டிக்டாக்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.