chandrayaan 3 pt
உலகம்

நிலவில் இந்தியா செய்த சாதனை.. அரண்டுபோன உலக நாடுகள்.. விண்வெளி தினத்தின் வரலாறு என்ன?

ஆகஸ்ட் 23, 2023... இந்த தேதி உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களில் சிலர் மறந்திருக்கலாம். ஆனால் தனது சாதனையால் உலக நாடுகளுக்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சியின் தாக்கம் குறைந்திருக்க வாய்ப்பில்லை.

யுவபுருஷ்

ஆகஸ்ட் - 23 நினைவிருக்கிறதா? 

ஆம், ஒருமுறை கூட நிலவில் கால்பதிக்காத ஒரு நாடு, நேரடியாக யாருமே தொடமுடியாத இடத்தில் தரையிறங்கி ‘இதுதாண்டா இந்தியா’ என்று மார்தட்டிக்கொண்ட நாள்தான் ஆகஸ்ட் 23ம் தேதி.

பூமியின் துணைக்கோளான நிலவில், இந்தியா செய்த சாதனையை போற்றும் வகையில், ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்படி அந்த தேதியில் இந்தியா என்ன சாதனை செய்தது? முதல் விண்வெளி தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், அதன் வரலாற்றையும், காரண காரியத்தையும் விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளே நிலவு ஆராய்ச்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், தனது நிலவு ஆராய்ச்சி பயணத்தை கடந்த 2008ம் ஆண்டு வெற்றிகரமாக தொடங்கியது இந்தியா. ஆம், நிலவு ஆராய்ச்சிக்காக சந்திரயான் - 1 விண்கலத்தை 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி விண்ணில் ஏவியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றி நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்ட இந்த விண்கலம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை செயல்பட்டது.

நீர் இருப்பை கண்டறிந்த சந்திரயான் -1 

சுமார் 1, 500 முறை நிலவைச் சுற்றிய சந்திரயான் 1, நிலவில் கனிம வளங்கள் இருப்பதையும், நீர் மூலக்கூறுகள் இருப்பதையும் உறுதி செய்தது. மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஃபோட்டோக்களையும் அனுப்பியது. நிலவு ஆராய்ச்சியில் ISROவின் இந்த முதல் முயற்சியே பல ஆய்வு முடிவுகளுக்கு வித்திட்டது பெரும் வெற்றியாக அமைந்தது.

சந்திரயான் முதல் வெற்றியைத் தொடர்ந்து, நிலவில் கால்பதித்து ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்ட இஸ்ரோ, அதற்கு ஒருபடி மேலாக யாருமே கால்பதிக்க முடியாத நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கி, அங்கு இருக்கும் சூழல் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டது. அதன்படி, 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பூமியில் இருந்து விண்ணில் பாய்ந்தது. ஒருமாத பயணத்திற்கு பிறகு ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான் 2.

கடைசி திக்திக் நொடிகள்.. பறிபோன வாய்ப்பு 

விண்கலத்திலிருந்து தனியாக பிரிந்த லேண்டர் தென் துருவத்தில் தரையிறங்க முற்பட்டபோது, செப்டம்பர் 9ம் தேதி இரவு சிக்னல் துண்டிக்கப்பட்டு தோல்வியைத் தழுவியது. இருப்பினும், விண்கலத்தில் இருந்த ஆர்பிட்டர் தொடர்ந்து ஆய்வு செய்து முடிவுகளை அனுப்பியது. கடைசி நொடியில் திட்டம் தோல்வியடைந்த நிலையில், அதில் இருந்து பெற்ற படிப்பினைகளை வைத்து சந்திரயான் 3 திட்டத்தை உருவாக்கியது இஸ்ரோ.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3 விண்கலம். தொடர்ந்து ஆகஸ்ட் 5ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்து, நிலவை 6 முறை சுற்றிய விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடியே, நிலவின் தென் துருவத்தில் Soft landing முறையில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர். அடுத்த நொடிப்பொழுதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து சாமானியர்கள் வரை உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்தன.

சந்திரயான் - 3 செய்த சாதனை 

தொடர்ந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் லேண்டரை ஃபோட்டோ எடுத்து அனுப்பியதோடு, ஆய்வு பணிகளை தொடங்கியது. திட்டமிட்டபடி அடுத்த 14 நாட்களுக்கு ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்த ரோவர், நிலவின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பநிலை குறித்து முக்கிய தரவுகளை தந்தது. அதன்படி நிலவின் தரைப்பகுதி ஆழம் சென்டிமீட்டர் சென்டிமீட்டராக செல்லச் செல்ல, வெப்பநிலை மிக அதிகமாக குறைவதை ரோவர் கண்டறிந்தது.

அதன்படி நிலவின் மேற்பரப்பு 50 டிகிரி செல்சியஸ்ஸாகவும், அதே 2 செமீ ஆழத்தில் 30முதல் 40 டிகிரி செல்சியஸாகவும், 6 செமீ ஆழத்தில் 0 முதல் -10 டிகிரி செல்சியஸாக இருப்பதும் தெரியவந்தது.

மேலும், நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர், அலுமினியம், கால்சியம், டைட்டேனியம், மாங்கனீஸ் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது. நிலவு ஆராய்ச்சியில் இது ஒரு பெரிய மைல்கல்லாகவே இருக்கிறது.

திரும்பி பார்த்த உலக நாடுகள்

இதுவரை எந்த நாடுகளும் தொட முடியாத நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி இந்தியா சாதித்த அதே நேரத்தில், தென் துருவத்தில் தரையிறக்க முயற்சித்த ரஷ்யாவின் லூனா 25 திட்டம் தோல்வியைத் தழுவியது. இது, அந்நாட்டுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் தேசிய விண்வெளி தினமான இந்த நாளில், நிலவு ஆராய்ச்சியில் உலக சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களுக்கும், திட்டத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் வாழ்த்து கூறி மகிழ்கிறது நமது புதியதலைமுறை.