எத்தியோப்பியா நாட்டின் டைக்ரே பகுதியில் அகதிகள் முகாம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர்.
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் அந்த நாட்டு அரசுக்கும், டைக்ரே பிராந்தியத்தை சேர்ந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. டைக்ரே பிராந்தியத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை வைத்து வருகிறது.
இந்த சூழலில், டைக்ரே பிராந்தியத்தில் போராட்டக்காரர்களை குறிவைத்து அடிக்கடி ராணுவத்தால் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இதில் ஏராளாமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர், மேலும் உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், டெடிபிட் நகரில் அகதிகள் முகாமாக செயல்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றின் மீது ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 56 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.