இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இது, பலவிதமான தொழில் நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. மேலும், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இதன்மூலம் பொறியாளர்களும் தயாரித்து வருகின்றனர். இது, சுகாதாரம், நிதி, போக்குவரத்து, உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக, சைபர் தாக்குதல்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், ’செயற்கை நுண்ணறிவு உலகெங்கிலும் உள்ள வேலை பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது’ என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “AIயின் வளர்ச்சியால் வளர்ந்த பொருளாதம் கொண்ட நாடுகளில் 60 சதவீதம் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் 40 சதவீத வேலைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே செயற்கை நுண்ணறிவால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.
இருப்பினும், AI காரணமாக மேம்பட்ட உற்பத்தித்திறன் ஆதாயங்களிலிருந்து பயனடையக்கூடும். அதனால், இத்தொழில் நுட்பம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்முடைய திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதில் நாம் அக்கறை செலுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவின் ஐந்தாண்டு பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.