உலகம்

சர்வதேச பயங்கரவாத பட்டியலில் மசூத் அசார் - நிலைப்பாட்டை மாற்றுமா சீனா?

சர்வதேச பயங்கரவாத பட்டியலில் மசூத் அசார் - நிலைப்பாட்டை மாற்றுமா சீனா?

webteam

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசார் விவகாரத்தில் இம்முறை சீனா பொறுப்பான முடிவு எடுக்கும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்‌ட நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா, மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

எனினும் ராஜாங்க ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்தார். அந்த சந்திபில் மசூத் அசார் விவகாரம் குறித்து அழுத்‌தம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், “மசூத் அசார் பெயரை ஐநாவின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத நபர்கள் பட்டியலில் சேர்க்க அனைத்து விதிகளிம் முறையாக பின்பற்ற வேண்டும். அத்துடன் இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த மூன்று முறை இந்தியா மசூத் அசாரின் பெயரை தடைசெய்யப்பட வேண்டிய பயங்கரவாத நபர்கள் பட்டியலில் வைக்கும் தீர்மானம் கொண்டு வந்த போது சீனா அப்போது இதனைத் தடுத்தது. அப்போது இதற்கு போதிய ஆதாரம் மற்றும் உறுப்பு நாடுகளின் அனுமதியில்லை என்று கூறி சீனா தீரமானத்தை தடுத்தது. மசூத் அசார் ஐநாவின் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அவர் ஐநாவின் உறுப்பு நாடுகளுக்கு பயணிக்க முடியாது. அத்துடன் அந்த நாடுகளிடமிருந்து அவர் எவ்வித நிதி மற்றும் ஆயுதங்களை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சீனா இத்தகைய கருத்தினை தெரிவித்துள்ளது. இந்தியா நடத்திய பால்கோட் விமானப்படை தாக்குதலுக்கும் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதனால், சீனா இந்த முறை மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க தடையாக இருக்காது என்றே கருதப்படுகிறது.