வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது வெடித்த வன்முறைகளில் சிக்கி 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில், இந்த போராட்டங்களில் ஈடுபட்ட வன்முறைகளில் சிக்கி 14 காவலர்கள் உட்பட 98 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டில் அனைத்து இணைய சேவைகள் முடங்கியுள்ளன.