துருக்கியின் ஊடுருவலை தடுப்பதற்காக குர்துக்களுக்கு உதவி செய்வதாக சிரிய ராணுவம் அறிவித்துள்ளது.
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினரும், கிளர்ச்சியாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சிரியாவின் வடக்கு எல்லையில் இருந்த தனது படைகளை அமெரிக்கா திருப்பி அழைத்துக் கொண்டது.
இதனால் அந்தப் பகுதியில் நுழைந்த துருக்கி ராணுவம், குர்து படை மீது தாக்குதல் நடத்தி வருகிறது. துருக்கியின் தாக்குதலை தடுக்க சிரியா தனது வடக்கு எல்லை பகுதியில் ராணுவத்தை குவிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சிரிய அரசுடன், குர்துக்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.
அதன்படி தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள மன்பீஜ் மற்றும் கோபேன் ஆகிய நகரங்களை சிரியா அரசிடம் ஒப்படைக்க குர்துக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.