தங்கள் நாட்டினர் ஜெயிஷ்-இ-முகமது அமைப்பினர் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுடன் தொடர்புடைய ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது.
இதனையடுத்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்னும் அளவிற்கு கருத்துக்கள் எழுந்தன. ஆனால், ஆதாரங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பால்கோட்டில் இந்தியா விமானப்படை தாக்குதலை நடத்த, பதிலுக்கு பாகிஸ்தான் விமானங்களும் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றன. அதற்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியில் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் பிடிபட்டு, பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
இத்தகைய சூழ்நிலையில் திடீரென ஜெயிஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாத் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனை சிறுநீரக பிரச்னை காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மசூத் அசார் உயிரிழந்துவிட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது என்பதுபோன்ற பல தகவல்கள் வெளியானது. இருப்பினும் அவரது சகோதரர் மசூத் அசார் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மசூத் அசார் சகோதரர் உள்ளிட்ட 44 பேரை பாகிஸ்தான் அரசு நேற்று அதிரடியாக கைது செய்தது. அவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தங்களது வழக்கமான நடவடிக்கைதான், வெளிப்புற அழுத்தத்தினால் செய்யவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில், ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு ராணுவத்தின் மேஜர் ஜெனரல் அசிப் கஃபூர் தெரிவித்துள்ளார். , “ஜெயிஷ்-இ-முகமது அமைப்பினர் பாகிஸ்தானில் இல்லை. ஐநா மற்றும் பாகிஸ்தானால் அது தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரே தெரிவித்திருந்த நிலையில், அந்த அமைப்பு தங்கள் நாட்டில் இல்லையென பாகிஸ்தான் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது.