உலகம்

ஆப்கன்: பெண்கள் நடிக்கும் நாடகங்களுக்கு தடை; பெண் நிருபர்களுக்கு ஹிஜாப் கட்டாயம்

ஆப்கன்: பெண்கள் நடிக்கும் நாடகங்களுக்கு தடை; பெண் நிருபர்களுக்கு ஹிஜாப் கட்டாயம்

நிவேதா ஜெகராஜா

ஆப்கனில் தொலைக்காட்சிகளில் பெண்களின் முகம் கூட தெரியக்கூடாது என்பதற்காக, தொலைக்காட்சியில் வரும் பெண் பத்திரிகையாளர்கள், தொகுப்பாளர்கள் பேசுகையில் (கேமராவுக்கு முன் வரும்போதெல்லாம்) ஸ்கார்ஃப் வகையில் ஏதாவதொன்று அணிந்து முகத்தை மறைத்திருப்பது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பலரும் தலிபானின் கட்டுப்பாடுகள் விளக்கத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல ஆப்கன் பெண்கள் நடிக்கும் தொலைக்காட்சி நாடகங்கள்; வெளிநாட்டு கலாசாரத்தை பிரதபிலிக்கும் அல்லது கற்பிக்கும் அந்நாட்டு படங்கள்/வீடியோக்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

சமீபத்திய தலிபான் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கையில் ஆப்கன் தொலைக்காட்சிகளுக்கான 8 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில்தான் மேற்கூறியவை வருகின்றது. அவற்றில் கூறப்பட்டிருக்கும் 8 கட்டுப்பாடுகள்:

* பெண்கள் நடிப்பில் வெளிவரும் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்பக்கூடாது

* மக்கள் புண்படும் வகையிலான நகைச்சுவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப படக்கூடாது

* பெண்களின் உடல் பாகங்கள் தெரியும் வகையிலான எந்த நிகழ்ச்சிகளும், படங்களும், வீடியோக்களும் ஒளிபரப்ப படக்கூடாது

* ஷரியா (அ) இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது

* ஆப்கனின் கருத்துகள் மற்றும் சட்டங்களுக்கு எதிரான படங்கள் தடை செய்யப்படுகிறது

* இஸ்லாமிக் ஹிஜாப் முறையை பெண் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டும்

* தீர்க்கதரிசிகளின் பங்கு கொண்ட தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தடைசெய்யப்படுகிறது

* மதத்தின் கண்ணியம் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த அறிவிப்புகள் அனைத்தையும், ஆப்கன் ஊடகத்தை சார்ந்த ஒருவரைவைத்தே அரசு தெரியப்படுத்தியுள்ளது. அவர் இதுகுறித்து பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில், “இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் சாத்தியப்படாது. அப்படியே சாத்தியப்பட்டாலும், தொலைக்காட்சி நடத்துவோர் அதை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்” எனக்கூறியிருந்திருக்கிறார். இதுமட்டுமின்றி காபூலின் மேயர் அப்பகுதியை சேர்ந்த மாநகர பெண் ஊழியர்கள் அனைவரையும், வீட்டுக்குள்ளே இருக்க அறிவுறுத்தியிருக்கிறார். ‘எப்போது ஆண்களால் வேலைகளை செய்து முடிக்க முடியவில்லையோ, அப்போது நீங்கள் வெளியே வந்தால் போதும்’ என பேசியிருக்கிறார் அவர்.

தொடர்ந்து பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுக்கும்படியான நடவடிக்கைகளை ஆப்கன் எடுப்பதாக கூறி, இவற்றுக்கு பல நாடுகளிலிருந்து எதிர்ப்புகளும் எழுந்துவருகிறது.