ஆப்கானிஸ்தான் எக்ஸ் தளம்
உலகம்

தாடி வளர்க்காத 281 வீரர்கள் நீக்கம்.. ஆப்கானில் தாலிபன் அரசு அதிரடி!

தாலிபன்கள் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள், பாதுகாப்புப் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Prakash J

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது தங்களின் முந்தைய ஆட்சிபோல கொடூரமாக இருக்காது என தாலிபன்கள் அறிவித்தனர். மேலும் ‘இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும்’ எனத் தெரிவித்த அவர்கள், நாட்கள் செல்லச்செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர்.

இதனால் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான சுதந்திரம் முழுவதுமாகப் பறிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக, வயது வந்த பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடைவிதிக்கப்பட்டது. சிறுமிகளாக இருந்தாலும்கூட சிறுவர்களுடன் இணைந்து கல்வி பயில தடை எனப் பல தடைகள் விதிக்கப்பட்டன.

தவிர, ஆடை அணிவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களுக்கு ஆண் துணையின்றிச் செல்லக்கூடாது என்பதுடன் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பல விளையாட்டு வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தினம் 993 முட்டை பஃப்ஸ் | CM ஆபீஸில் ரூ.3.62 கோடி ஊழல்.. சிக்கலில் ஜெகன் மோகன்? அதிரும் ஆந்திரா!

அதேபோல், அரசு ஊழியர்களுக்கும் சில கட்டுப்பாடுகளைத் தாலிபன்கள் விதித்திருந்தனர். அதன்படி, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது. அவர்கள் தாடியுடன், பைஜாமா, ஜிப்பா ஆடையே அணிய வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், தாலிபன் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் சட்டமாக்கல் பிரிவு இயக்குநர் மோஹிபுல்லா மோஹாலிஸ், “இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 21,328 இசைக்கருவிகள் அழிக்கப்பட்டன. ஒழுக்கநெறி தவறிய திரைப்பட சிடிக்களை சந்தையில் விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு தாடி வளர்க்காத 281 வீரர்கள், பாதுகாப்புப் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல், உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை| கண்டெடுக்கப்பட்ட டைரி.. கிழிக்கப்பட்ட பக்கங்கள்.. சூடுபிடிக்கும் விசாரணை!