உலகம்

தாலிபானின் மிரட்டலுக்கு ஆளான மெஸ்ஸியின் குட்டி ரசிகன்!

தாலிபானின் மிரட்டலுக்கு ஆளான மெஸ்ஸியின் குட்டி ரசிகன்!

webteam

கால்பந்து வீரர் மெஸ்ஸியின் குட்டி ரசிகரான சிறுவன் முர்தாஜாவுக்கு தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்

பாலீத்தின் பையில் மெஸ்ஸியின் பெயரை எழுதியடி கால்பந்து விளையாடியதால் உலக அளவில் பிரபலமானவர் முர்தாஜா. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரின் காஸினி கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் முர்தாஜா அஹ்மதி, லயோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகன். அர்ஜென்டினா அணியின் ஜெர்சியை கூட வாங்க பணம் இல்லாத நிலையில் பாலீத்தின் பையில் மெஸ்ஸியின் பெயரை எழுதியடி கால்பந்து விளையாடியதால் பிரபலமடைந்தார் முர்தாஜா.  புகைப்படங்கள் இணையங்களில் பரவ மெஸ்ஸியின் பார்வைக்கு சென்றது.

உடனடியாக தனது கையெழுத்திட்ட ஜெர்சியை சிறுவன் முர்தாஜாவுக்கு பரிசாக அனுப்பி வைத்தார் மெஸ்ஸி. அதன்பின்னர் தோகாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மெஸ்ஸியை நேரில் சந்தித்து தனது கனவை நனவாக்கினார் முர்தாஜா. 

இந்நிலையில் சிறுவன் முர்தாஜாவுக்கு தாலிபான் மிரட்டல் விடுத்துள்ளனர். சிறுவன் முர்தாஜா தங்கள் கையில் கிடைத்தால் துண்டு துண்டாக வெட்டி கொன்று விடுவோம் என தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். முர்தாஜ் வசிக்கும் காஸினி பகுதியில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதால் முர்தாஜா உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரின் தாயார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர் ''முர்தாஜா உலக அளவில் பிரபலம் ஆனதால் எங்களால் வெளியே சுதந்திரமாக நடமாட முடியவில்லை. என் குழந்தைகள் பள்ளிக்கு கூட போக முடியவில்லை. என் மகனுக்கு தாலிபானால் பிரச்னை வரும் என்று பயமாக இருக்கிறது. நாங்கள் காஸினி பகுதியை விட்டு வெளியேற உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்

தாலிபான் மிரட்டல் குறித்து பேசிய சிறுவன்  முர்தாஜா, ''எங்கள் ஊரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சாதகமாக இல்லை. நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நான் மெஸ்ஸியை போல் பெரிய கால்பந்துவீரனாக ஆக வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.