அதானி, அமெரிக்கா எக்ஸ் தளம்
உலகம்

தீயாய் பரவிய லஞ்ச குற்றச்சாட்டு செய்தி! கடும் வீழ்ச்சியை சந்தித்த அதானி குழும பங்குகள்! நடந்ததுஎன்ன?

கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Prakash J

அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தது. எனினும், இன்றுவரை அதானி குறித்த விவகாரங்கள் பேசுபொருளாகவே உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க இந்தியாவின் 2ஆவது பெரிய பணக்காரரும், உலக பணக்காரர்கள் பட்டியலில் 22ஆவது இடத்தில் உள்ள பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம் பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கவுதம் அதானி

முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக, அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாகப் பேசியதாகவும், அதேபோல், அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதாகவும் அதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதையும் படிக்க:மசோதாவிற்கு எதிர்ப்பு | திரண்ட 42,000 பேர்.. மாவோரி இன மக்களின் போராட்டத்தால் திணறிய நியூசிலாந்து!

குற்றச்சாட்டைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த அதானியின் பங்குகள்!

அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் 20 சதவிகிதம் வரை சரிந்தன. இதில், அதானி பசுமை ஆற்றல் (கிரீன் எனெர்ஜி) நிறுவனத்தின் பங்குகள் 16 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அதானி பவர் மற்றும் அவருடைய துறைமுகத்தின் பங்குகளும் சரிவைக் கண்டன. இதன் காரணமாக ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை அதானி குழும நிறுவனங்கள் இழந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு

இந்த நிலையில், அமெரிக்க நீதிமன்றம் கூறிய குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அமெரிக்க நீதித்துறை, அதானி குழுமத்தின் இயக்குநர்கள் மீது குற்றம்சாட்டியிருப்பது அடிப்படை ஆதாரமற்றவை ஆகும். அந்தக் குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்.

அமெரிக்க நீதித்துறை தங்களது குற்றச்சாட்டில் கூறியுள்ளதுபடி, இவை வெறும் குற்றச்சாட்டே ஆகும். குற்றம் நிரூபிக்கப்படும்வரை நாங்கள் நிரபராதிகள்தான். இந்தக் குற்றம் சம்பந்தமாக அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

அதானி குழுமம் சட்டத் திட்டங்கள், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முழுவதுமாக கடைப்பிடிக்கும் நிறுவனம் ஆகும். நாங்கள் எங்கள் பங்குதாரர்கள், கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதியளிக்கிறோம். சட்டத்தை மதிக்கும் எங்கள் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:275 மில்லியன் டாலர்.. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு காட்டும் அமெரிக்கா.. என்ன காரணம் தெரியுமா?

அதானி குழுமம் முறைகேடு குறித்து ராகுல் பேச்சு

இந்தப் பிரச்னையை ராகுல் காந்தி எழுப்பியுள்ளார். அவர், ”கவுதம் அதானி இந்திய மற்றும் அமெரிக்க சட்டங்களை மீறியுள்ளார் என்பது தற்போது அமெரிக்காவில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதானியை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்.

வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த பிரச்னையை எழுப்புவேன். இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை வைக்கும். மோடி அரசாங்கம் அவரைப் பாதுகாத்து வருவதால், இந்தியாவில் அதானி கைது செய்யப்படமாட்டார் அல்லது விசாரிக்கப்படமாட்டார் என என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். பிரதமரும் அதானியும் ஒன்றாக இருக்கும்வரை, அதானி இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ராகுல் காந்தி

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

அதானி குழுமம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவும் பதிலளித்துள்ளது. பாஜக தலைவர் அமித் மால்வியா, ”இது வெறும் அதிகார வரம்பைத் துஷ்பிரயேகம் செய்கிறது. அதுமட்டுமின்றி, இந்திய நீதிமன்றமும் இதேபோல், அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்து, இந்திய சந்தைகளுக்குள் நுழைய மறுப்பதாகக் குற்றம்சாட்டலாம். ஒரு வெளிநாடு, உள்நாட்டு அரசியலில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அல்லது விதைக்க சட்டம் அதன் போக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "நிறுவனம் மற்றும் அதற்கு எதிரான வழக்கைப் பொறுத்தமட்டில், நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிடும் மற்றும் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 1000 நாட்கள்! பற்றி எரியும் நெருப்பு.. உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுவரை நடந்தது என்ன? 20 முக்கிய Points

பாஜக கருத்துக்கு செந்தில்பாலாஜி பதில்

மேலும், இந்த ஒப்பந்த விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசுக்கும், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா (ஜெகன்மோகன் அரசு) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் தொடர்பிருப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும், குறிப்பிட்ட ஆண்டில், காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிக் கட்சியே ஆளுங்கட்சியாக இருந்துள்ளது என்று மால்வியா குற்றம்சாட்டியிருக்கிறார்.

செந்தில் பாலாஜி

பாஜவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”கடந்த 3 ஆண்டுகளில் அதானி குழுமத்துடன் தமிழக அரசு எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கான மின்தேவையை கருத்தில்கொண்டு ஒன்றிய மின்சாரத்துறையுடன் 1500 மொகா வாட் மின்சாரம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சாரத் துறை எந்த விதத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. தவறான கருத்துகளை சிலர் பதிவிட்டு வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:எலான் மஸ்க் To சுசி வைல்ஸ்| ட்ரம்பின் அறிவித்த முக்கிய ஆட்சியாளர்கள்..இதுவரை யார் யார்..முழு விவரம்!