உலகம்

ஆஸ்கர் அமைப்பிலிருந்து விலகினார் நடிகர் வில் ஸ்மித்

ஆஸ்கர் அமைப்பிலிருந்து விலகினார் நடிகர் வில் ஸ்மித்

Sinekadhara

ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை பற்றி நகைச்சுவையாக பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனைத்தொடர்ந்து நடிகர் வில் ஸ்மித், தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் மன்னிப்பு கோரினார்.

இதுதொடர்பாக ஆஸ்கர் அகாடமி அளித்த விளக்கத்தில், கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. தொடர்ந்து அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதால் வில் ஸ்மித்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது Academy of Motion Picture Arts and Science அமைப்பின் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஸ்மித். கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவிருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.