உலகம்

‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ1 கோடி’ - ஜாக்கிசான் உருக்கமான பதிவு

‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ1 கோடி’ - ஜாக்கிசான் உருக்கமான பதிவு

rajakannan

தன்னுடைய தோழர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பதை தன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை என்று சீன நடிகர் ஜாக்கிசான் உருக்கமாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீன மக்கள் மிகுந்த வேதனையுடன் நாட்களை கடத்தி வருகிறார்கள். தங்கள் கண்முன்னே மக்கள் நாள்தோறும் இறந்து வருவதை பார்த்து அவர்கள் மனமுடைந்து போகிறார்கள். கொரோனா வைரஸ் இதுவரை 900-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டு விட்டது. ஆனாலும், உயிரிழப்பு நின்றபாடில்லை. இதற்குமுன் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. சீன மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக நட்சத்திர நடிகர் ஜாக்கிசான் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் யென் பணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு ரூ1.02 கோடி ஆகும். 65 வயதான ஜாக்கிசான் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இதுதொடர்பாக உருக்கமாக சில விஷயங்களை எழுதியுள்ளார்.

அதில், “அறிவியலும், தொழில்நுட்பமும்தான் இந்த வைரஸை வெற்றிகொள்ள இருக்கும் வழி. என்னைப்போல் பலரும் இதே எண்ணத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன். கொரோனாவுக்கு விரைவில் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புகிறேன். என்னிடம் ஒரு சின்ன யோசனை இருக்கிறது. தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு குழுவோ இதற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யென் தொகையால் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இது பணத்தை பற்றியது அல்ல. மிகுந்த பரபரப்பான வீதிகள் எல்லாம் இப்படி வெறிச்சோடி கிடப்பதை பார்க்க நான் விரும்பவில்லை. என்னுடைய தோழர்கள் இந்த வைரஸ் உடன் போராடிக் கொண்டிருப்பதையோ, அல்லது மகிழ்ச்சியாக வாழ வேண்டிய அவர்கள் மரணமடைவதையோ என்னால் பார்க்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். ஜாக்கிசானின் இந்தப் பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.