பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபி, கனடா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசியா பீபி (47) என்ற கிறிஸ்தவப் பெண், இஸ்லாம் மதத்தை அவமரியாதையாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தில் அவர் மீது, மத நிந்தனை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அவருக்கு 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து அவர், 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீபியை கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்பட்டது. அதனால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டன. பீபியின் கணவர் மணிஷ் தன் குடும்பம் குடும்பம் நாட்டை விட்டு வெளியேற உதவி செய்யுமாறு கேட்டுக் கொண் டார்.
இந்நிலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பீபி, ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கி ருந்து வேறு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் எந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது தெரிவிக் கப்படவில்லை.
இந்நிலையில் அவர் கனடாவுக்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர் கனடா வந்து சேர்ந்துவிட்டதாகவும், அங்கு அவரது மகள்களுடன் சேர்ந்துவிட்டதாகவும் ஆசியா பீபியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.