தேர்தல் ட்விட்டர்
உலகம்

’2024 - தேர்தல்களின் ஆண்டு’: இந்தியா To அமெரிக்கா.. 50 நாடுகளில் களைகட்டப் போகும் ஜனநாயக திருவிழா!

அரசியலுக்கு ஆதாரமாக இருப்பது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல். அத்தகைய தேர்தல், இந்த வருடம் மட்டும் 50 நாடுகளில் நடைபெற இருக்கப்போவதுதான் ஆச்சர்யமான விஷயம்.

Prakash J

இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தெரிகிறது. இதற்கான பணிகளில் தற்போது அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.

இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளிலும் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தவகையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பெய்ஜிங், தைவான், பாகிஸ்தான், இந்தோனேசியா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற இருக்கும் தேர்தல் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற மற்றும் மெக்சிகோ நாட்டின் அதிபர் தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.

அக்டோபர் மாதம் பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதுபோல், பொருளாதார நெருக்கடியால் அரசியல் குழப்பம் ஏற்பட்ட இலங்கையிலும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. உஸ்பெகிஸ்தானில் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியா மற்றும் எல் சால்வடார், பெலாரஸ் ஆகிய நாடுகளில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. செனகல் பிராந்தியத்திலும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்காவில், மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆப்பிரிக்கா கண்டத்தின் செனகல், தெற்கு சூடான் ஆகிய முக்கிய நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உலகின் இளைய நாடான தெற்கு சூடானில் டிசம்பரில் நடைபெற இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிலும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி விளாடிமிர் புதினே வெற்றிபெறுவார் எனச் சொல்லப்படுகிறது. இதுதவிர, ஐஸ்லாந்து, ஈரான், மால்டோவா, பனாமா, மெக்சிகோ, துனிஷியா உள்ளிட்ட நாடுகளும் தேர்தலைச் சந்திக்க உள்ளன.

இதற்கிடையே அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா 4வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார். அதுபோல் கடந்த ஜனவரி 6ஆம் தேதி தைவானிலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றது. இதன்மூலம் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.