உலகம்

மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் உறைந்த ஏரி: காற்று மெத்தையை பயன்படுத்தி உயிர் பிழைத்த பெண்

மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் உறைந்த ஏரி: காற்று மெத்தையை பயன்படுத்தி உயிர் பிழைத்த பெண்

EllusamyKarthik

‘டைட்டானிக்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அப்படியே ஒரு முறை ரீவைண்ட் செய்து பாருங்கள். உறைபனியில் நாயகி ரோஸின் உயிரை காக்க பனி படர்ந்த நீரில் இருந்து தனது உயிரை தியாகம் செய்வார் நாயகன் ஜேக் டாசன். அது ஒரு அழகிய காதல் காவியம். பின்னர் ரோஸ் மர பலகையில் மிதந்து உயிர் பிழைப்பார். அது மாதிரி இல்லையென்றாலும் அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 

அமெரிக்க நாட்டின் ஒக்லஹோமா-டெக்சாஸ் எல்லையில் உள்ள டெக்சோமா ஏரியின் மறு கரையில் உள்ள படகை பிடிப்பதற்காக காற்றடைத்த மெத்தையின் துணை கொண்டு கடக்கும் முயற்சியில் பெண் ஒருவரும், அவரது ஆண் நண்பரும் மேற்கொண்டுள்ளனர். அப்போது கடுமையான குளிர் நிலவியுள்ளது. அந்த பெண்ணின் ஆண் நண்பர் தன்னால் குளிர் தாங்க முடியவில்லை என சொல்லி, ஆரம்பித்த சில நிமிடங்களில் மெத்தையை விட்டு நீரில் இறங்கி, நீந்தி அவர்கள் புறப்பட்ட கரைக்கே திரும்பியுள்ளார்.

ஆனால் அந்த பெண் நீரில் இறங்கினால் தன்னால் குளிர் தாங்க முடியாது என்பதால் மெத்தையிலேயே இருந்துள்ளார். அதோடு கரை சேர முடியாமல் ஏரியின் நடுவில் சிக்கியுள்ளார். ஆண் நண்பரும் அவருக்கு உதவவில்லை எனத் தெரிகிறது. அப்படியே சுமார் 48 மணி நேரம் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் உறைந்த ஏரியி மிதந்துள்ளார் அந்த பெண். உதவிக்காக கூக்குரல் எழுப்பியுள்ளார். இருந்தும் உதவி கிடைக்கவில்லை. பின்னர் சரக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த ரயில்வே துறையினர் அந்த பெண்ணை கவனித்துள்ளனர். பின்னர் அவர்கள் அவசர உதவி குழுவை நாடியுள்ளனர். மீட்பு குழுவினர் உதவியுடன் உயிர் பிழைத்துள்ளார் அப்பெண். அந்த பெண்ணின் பெயர் Connie என தெரியவந்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.