உலகம்

ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

JustinDurai

ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகள் குலுங்கின.

ஜப்பானில், சரியாக 11 ஆண்டுகளுக்கு முன், ரிக்டர் அளவில் 9.0 அளவில் இதே ஃபுக்குஷிமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், அணுமின் நிலையங்கள் பாதித்தன. அப்போது வெளியான அணு கதிர்வீச்சின் தாக்கம் இன்றும் ஃபுக்குஷிமாவை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. இந்தச் சூழலில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. பலசரக்கு கடையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளன. பல வணிக நிறுவனங்களில் இருந்த அலங்கார கண்ணாடிகளும் சில்லு, சில்லாக உடைந்துள்ளன.

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. ரிக்டரில் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் டோக்யோவின் வடகிழக்கில் 8 அங்குல உயரத்திற்கு கடலில் அலைகள் எழும்பியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானியல் முகமை தெரிவித்துள்ளது. ஃபுக்குஷிமாவில் உள்ள ஒரு நகரில் கட்டடங்கள் சேதமடைந்ததுடன், தீ விபத்தும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 80க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் சுமார் 20 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கிய நிலையில், சேதமடைந்த மின் இணைப்புகள் விரைவில் சீர் செய்யப்படும் என பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நகரங்களில் உள்ளூர் ரயில் சேவை சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் இயக்கப்பட்டது. அதே நேரம் ஃபுக்குஷிமா, மியாகி இடையே புல்லட் ரயில் ஒன்று தடம்புரண்டதாக ஜப்பான் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. எனினும் பயணிகள் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு