Daisuke Hori  எக்ஸ் தளம்
உலகம்

நெசமாத்தான் சொல்றீங்களா!! 12 ஆண்டுகளாக தினமும் 30 நிமிடம் மட்டுமே உறக்கம்.. அசத்தும் ஜப்பானியர்!

கடந்த 12 ஆண்டுகளாக ஒருநாளைக்கு வெறும் அரைமணி நேரம் மட்டுமே தூங்கிறார் ஜப்பானைச் சேர்ந்த ஒரு நபர்.

Prakash J

’உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று சொல்லப்படுவதைப்போல உறக்கமில்லா மனிதனும் நோயாளிதான் எனச் சொல்லப்படுவதுண்டு. ஒரு மனிதர் புத்துணர்வு பெறுவதற்கும், அவரது உடல் சரியாக இயங்குவதற்கும் தூக்கம் என்பது அவசியமாகும். அதனால்தான் ஒவ்வொருவருக்கும் தூக்கம் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது. ஆகையால், எல்லா மனிதர்களும் அயர்ந்து தூங்கி எழுந்தாலே, உடல் புத்துணர்ச்சி பெற்றுவிடும். இதையடுத்துத்தான், ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேர தூக்கம் வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒருநாளைக்கு வெறும் அரைமணி நேரம் மட்டுமே தூங்கிறார் ஜப்பானைச் சேர்ந்த ஒரு நபர்.

மேற்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்தவர், டெய்சுகே ஹோரி (Daisuke Hori). 40 வயதான இவர், கடந்த 12 வருடங்களாக, நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்களே தூங்குகிறார். ’யோமியூரி’ (Yomiuri) என்ற தொலைக்காட்சி சேனல், ஹோரியின் அன்றாட செயல்பாடுகளை 3 நாட்களுக்குத் தொடர்ந்து ஒளிபரப்பியது. Will You Go With Me? என்ற பெயரில் வெளியான அந்த நிகழ்ச்சியில் ஹோரி, எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் நாள் ஒன்றுக்கு 26 நிமிடமே தூங்குவது தெரியவந்தது. அதேநேரத்தில், தன்னுடைய வேலைகளை அதிக சுறுசுறுப்பாக அவர் செய்ய முடிந்ததையும் காண முடிந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் குறைந்த தூக்கத்திற்கான பயிற்சி வகுப்புகளை எடுத்துவரும் ஹோரி, இதுவரை 2100 பேரை ultra-short sleepers ஆகவும் மாற்றியுள்ளார். அவருடைய பயிற்சி பெற்ற மாணவர் ஒருவர், தினம் எட்டு மணி நேர தூக்கத்திலிருந்து தற்போது 90 நிமிடமாக குறைத்துள்ளேன் என யோமியூரி டிவி சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிக்க: புல்டோசர் நடவடிக்கை: சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்... வரவேற்ற ராகுல் காந்தி!

இதன்மூலம், தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துக்குப் பழக்கப்படுத்தி உள்ளதாகவும், இதனால் தனது செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாகவும் ஹோரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நீண்டநேர தூக்கத்தைவிட, ஆழமான குட்டித் தூக்கம் நம்முடைய செயல்திறனை மேம்படுத்தவும், வேலைத்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. உணவு உண்பதற்குப் பல மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்வதும், காபி குடிப்பதும் தூக்கக் கலகத்தை நீக்கும். உதாரணமாக மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் குறைந்த நேரம் ஓய்வெடுத்தாலும் அதிக ஊக்கத்துடன் செயல்படுகிறனர்” தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வியட்நாமைச் சேர்ந்த, 80 வயது நிறைந்த தாய் கோக் [Thai Ngoc] என்பவர் கடந்த 61 வருடங்களாக, தாம் தூங்கவே இல்லை என்று கூறி பலரையும் ஆச்சர்யப்பட வைத்தார். 1962இல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், அதன்பின் தனது தூங்கும் திறனை இழந்துவிட்டதாகவும், மருந்து மற்றும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும் தன்னால் தூங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஹரியானா | காரில் பசு கடத்துவதாக வந்த தகவல்.. 12ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்ற கும்பல்!