ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் 36 வயதான டெய்சுகே ஹோரி (Daisuke Hori). இவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக உடல் ஆரோக்கியத்திற்காக நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக தெரிவித்துள்ளார். அப்படி செய்வதன் மூலம் அவர் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் குறைவான நேரம் மட்டுமே தூங்குவோர் சங்கத்தின் தலைவராக உள்ள அவர், இதுவரை நூற்றுக்கணக்கான பேருக்கு மிகவும் குறைந்த நேரம் தூங்குவது எப்படி என்ற வித்தையையும் பயிற்றுவித்து வருகிறார்.
குறைந்தது 6 முதல் 9 மணி நேரம் வரை ஒருவருக்கு உறக்கம் வேண்டும் என மருத்துவ உலகம் சொல்லி வரும் நிலையில் தனக்கு அந்த நேரம் போக மீதமுள்ள 16 மணி நேரம் வாழ்வில் சாதிக்க போதவில்லை என்ற காரணத்தினால் உறக்கத்திற்கு ‘குட்பை’ சொல்லிவிட்டதாக சொல்கிறார் அவர்.
இதை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் ஜப்பான் நாட்டு ஊடக நிறுவனத்தை தன்னுடன் மூன்று நாட்கள் இருக்க செய்து, உறக்கத்தை எப்படி தவிர்க்கிறார், அந்த சமயத்தில் என்னென்ன செய்கிறார் என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதில் முதல் நாள் அன்று காலை 8 மணிக்கு விழித்த டெய்சுகே ஹோரி, உடற்பயிற்சியில் ஆரம்பித்து வாசிப்பது, எழுதுவது என அந்த நாளை செலவிட்டுள்ளார். பின்னர் இரவு 2 மணி அளவில் தூங்கிய அவர். அடுத்த 26 நிமிடங்களில் அலாரத்தின் அலறல் சத்தமில்லாமல் எழுந்துள்ளார்.
பின்னர் அலை சறுக்கில் ஆரம்பித்த அன்றைய நாள் மீண்டும் உடற்பயிற்சி, வாசிப்பு, நட்பு என நகர்ந்துள்ளது. தூங்கும் நேரங்களில் இவர் தனது சங்கத்தின் சக உறுப்பினர்களுடன் பொழுதை செலவு செய்கிறாராம். இப்படியாக அந்த மூன்று நாட்களையும் அவர் கடந்துள்ளார்.
பெரும்பாலும் தூக்கம் வராமல் இருக்க காஃவீன் உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம் அவர். இருப்பினும் பெருவாரியான மக்கள் அவர் 12 ஆண்டுகளாக வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவது நம்ப மறுத்து வருகிறார்களாம்.
இதையும் படிக்கலாம் : அமீரகத்தில் ஐபிஎல்: முதல் போட்டியே செம்ம வெயிட்டு.. இதுவரை சிஎஸ்கே Vs மும்பை எப்படி?